திங்கள், 31 மே, 2010

சில மின்னல்கள்...

அருவி நீர் போல் வாழ்வின் கணங்கள் அத்தனை வேகமாக கடந்து போகிறது. விழும் ஒவ்வொரும் நீரும் புதிது.அருவிக் குளியலின் அனுபவத்தை என்னால் நிமிடத்துளிகளாக வர்ணிக்க இயலாது. மொத்த துளிகளையும்  மணிநேரமாக தொகுத்து கூறவே இயலும்.


ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நினைவு கூறப்படும் வாழ்வும் அங்கனமே உள்ளுமோ.


பதிவுகள் மட்டுமே வாழ்க்கையாகும் காலம் வரும். நினைவூஞ்சலாடி பின்னுக்குப் பதிவில் போய், முன்னுக்கு நிகழ்வில் போய், எங்கு நிறுத்த என்று அறியாமல் அரிக்கும் நரையின் கரை சேராதவர்களின் மரணம் இனிதே....




கவிதையும்,வாழ்வும் எவ்வளவு சிறியாக உள்ளதோ அவ்வளவு அழகாக இருக்கும். சான்றுகளுண்டு நிறைய...இருப்பினும் ஒப்புக்கொள்ளாது மனம்..எனக்கு அது வாய்க்கும்வரையில்...


வானவில் போல வந்து வண்ணங்களாகி நிறையும் மனிதர்களை,என் ஞாபகக் கூட்டிற்குள் பொத்திவைத்தல் என்பது தவிர்க்க இயலாத வழக்கமாகிவிட்டது எனக்கு.


ஆசானின் வார்த்தையைப் போல் சரியையும்,உண்மையையும் சொல்வதல்ல என் எழுத்து,நான் சரியென நம்புவதையும்,உண்மையென எனக்குப்படுவதையும் கூறுவதே.


அதே போல் எனக்குப் பிடித்தவைகளைப் பகிர்வதிலேயே எனக்கு மகிழ்ச்சி.


கண்களினால் சிரிப்பவர்களின் முகங்களை மறப்பதோ அல்லது அவர்களின் பிரியங்களைத் தவிர்ப்பதோ அத்தனை எளிதான காரியமல்ல..


அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.ரகுவரன். ”இது ஒரு மனிதனின் கதை” என்ற அவருடைய தூர்தர்ஷன் தொடர் முதல் சமீபத்தில் கடைசியாக அவர் நடித்த அல்லது நான் கடைசியாகப் பார்த்த “யாரடி நீ மோகினி” வரையில் நான் அவரைத் தொடர்ந்திருக்கிறேன்.


 ஒரு கதாபாத்திரமாக வெளித்தெரியாமல், அந்த கதாபத்திரமாகவே தன்னை  மாற்றிக்கொள்கிறவனே  நல்ல நடிகன்.


அதுபோல எந்த கள்ள கபடமுமின்றி தொடங்கும் வாழ்க்கை காற்றின் திசைக்கேற்ப அலைகழிக்கப்படும் பாய்மர படகென சூழ்நிலை அலைகழிப்புகளால் மாற்றம் பெறும் வாழ்கைதான் “ இது ஒரு மனிதனின் கதை”.


அந்த தொடரில் அவருடைய குடிகார வேடம்   புகைப்படகருவியை  அவருடைய வீட்டில் ஒளித்துவைத்து படம் பிடித்தது போன்று   இயல்பாகயிருந்தது.


அந்தத் தொடரிலிருந்துதான் நான் அவரின் அபிமானியானேன்.


சுமார் 13 பக்களவிலான வசனத்தை வெறும் ஒற்றை ஆங்கிலச் சொல்லாக(I KNOW-புரியாத புதிர்) மாற்றி,  ஏற்ற இறக்கங்களோடு (modulation??) வெவ்வேறு முகபாவங்களோடு, உண்மையான உளவியல் கோளாறு உள்ளவனின் சிரிப்போடு அந்த பாத்திரத்தை நம் கண் படைத்துக்காட்டிய அந்த கலைஞனை அவ்வளவு சுலபமாக மறப்பதற்கியலுமா..


எந்த ஒரு சிறிய பாத்திரமெனினும் முதல் படத்தைப் போன்ற சிரத்தை அவருடைய தனிக்குணாம்சம்.


யாருடைய தழுவலையும் போலன்றி, தனக்கு வழங்கப்படும் எந்த ஒரு பாத்திரத்தையும் தன்னிலிருந்து மலரச்செய்யும் இவருடைய உழைப்பு வியப்பிற்குரிய ஒன்று.இன்று எல்லாராலும் அனிச்சைசெயல் போல் உச்சரிக்கப்படும் “ஹோம் ஒர்க்” என்ற சொல்லை இவர் மூலமே நான் முதலில கேட்டறிந்தேன்.சிவாஜியிடம் நான் கேட்ட  சொல்  கூட ஒத்திகையென்பதே.அது அவருடைய மரபு வழித் தொடர்ச்சி.


படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முதல் நாளும்,படப்பிடிப்பின் அதிகாலை-யிலும்  கடற்கரைக்குச் சென்று தன் மனவார்ப்பை ஒரு முறை பரிசோதித்துக்கொள்ளல் என்பது இவருடைய வழக்கம் என்று நேர்காணலில் ஒருமுறை குறிப்பிட்டார்....


தனக்கு முன் தடம்பதித்தவர்களை விட்டு விலகி மற்றாருடைய பாதிப்புமின்றி தனக்கென ஒரு தடம் வகுத்துக்கொள்ளல் அத்தனை எளிதான காரியமல்ல...உலகநாயகனிடத்தில் கூட பாலச்சந்தர்,நாகேஷ் மற்றும் நடிகர்திலகத்தின் சாயல் ஏதேனும் ஒரு மூலையில் வெளிப்படவே செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.


என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இவருடைய நடிப்பில் நான் யாருடைய பாதிப்பையும் கண்ணுற்றதில்லை.


இவருடைய புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் நளினம் பார்த்து இன்னும் அந்த பழக்கம் என்க்கு ஒட்டிக்கொள்ளாதது வியப்பே.செயல் தவறெனினும் செய்நேர்த்தி சில சம்யம் நம்மை நெக்குருக வைத்துவிடுகிறது.


பெரிய மற்றும் வித்தியாசமான ஒப்பனைகள்,பேச்சு வழக்கில் மாற்றம் ஏதுமின்றி வெறும் உடல்மொழியாலேயே தன்னுடைய கதாபாத்திரங்களை துலங்கச் செய்திடுவதில் அவருக்கு நிகர் அவரே.


புரியாத புதிர்,பூவிழி வாசலிலே,என் பொம்முக்குட்டியம்மாவுக்கு, அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், ஆஹா,கூட்டுப்புழுக்கள்,முதல்வன்,துள்ளித்திரிந்த காலம்,கன்னுக்குள் நிலவு,முதல் உதயம்,காதலும் கற்று மற   முதலானவகள் என் ஞாபகவெளியில் இப்போதைக்குத் தெறிக்கும் சில படங்களாகும்.


பொதுவாகவே மம்முட்டியைப் போலவே தன்னுடைய ஆளுமையை கம்பீரமாகவே நிறுவிக்கொண்டவர்.


அவருடைய அந்தக் கம்பீரமான நடிப்பிற்காகவே பிடித்து சில,பிடிக்காமல் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.


“BROKEN AERROW" என்ற படத்தில் ஜான் டிரவோல்டா (JHON TRAVOLATA) ஒரு ஸ்டைலிஷ் ஆன வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவு ஸ்டைலிஷ் ஆன  நடிகர் தமிழில்  யாரென்று யோசித்தால் என் கண்முன்னே உடனே நிழலாடுவது இவருடைய முகமே. அவ்வளவு அருமையான நடிகர்.


என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய அந்த உயரமும், அற்புமான அந்த சிரிப்பும்.வில்லத்தனத்திறக்கென்று ஒரு சிரிப்பும், வில்லங்கமில்லாதனத்-திற்கு என்று  ஒரு சிரிப்பும் என நிறபேதங்களுடன் கூடியது அவ்ருடைய சிரிப்பு.


”என் சுவாசக் காற்றே” என்ற படத்தில் ரகுவரனுக்கும், பிரகாஷ் ராஜ்க்கு-மிடையேயான காட்சிகளின் சுவராஷ்யம் அத்தனை அலாதியானது. விழியில் நீர் வர யோசித்து யோசித்து நானும் என் நன்பனும் நகைத்த காட்சிகள் நிறைய உண்டு.


ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஒரு சாதரன மனிதன் என்ற நிலையிலும் எனக்கவர் மிகுந்த விருப்பத்திற்கும், நேசத்திற்குரிய- வருமாகவே இருக்கிறார்.


அவருக்குள்ளும் ஒரு காதல் சோகமுண்டு. காதலைப் பற்றி அவருடைய சில வரிகள் என்னைக் கவர்ந்தது...அவை:


’மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை ஆரதிக்கிறதுக்குப் பேர்தான் லவ்.நம்மை மாதிரி பசங்களுக்குத் தேவையான ஆறுதல்,ஆதரவு,அன்பு எல்லாமே ஒரே ஒரு பொன்னுகிட்டே கிடைச்சடறது (அ) கிடைச்சதா நாம பீல் பன்றதுதான் லவ்.


இருபது வயசுப் பையன் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றி யோசிக்கிறதவிட இன்னிக்கு என்ன பூ பூக்குன்னுதான் பார்ப்பான். எனக்கப்போ இருபது வயசு.


அவளை நேர்ல பார்க்கும்போது எதுனா கிறுக்கிட்டு இருக்கப் பிடிக்கும்.ஆனா ஒரு நாள் பார்க்கலைனாக் கூட கிறுக்குப் பிடிக்கும்’


கடைசியா தன்னோட காதல் தோல்வியை பதிவு செய்யற விதம் :


நான் ஒரு பறவையை நேசிச்சேன்.எனக்கு அது உயிர் மாதிரி.அதுக்காக அதை ஒரு கூண்டுக்குள்ள அடச்சுவச்சுப் பார்க்கிறதுல அதுக்கே சம்மதமில்லை.நான் அதை நேசிச்சேன்.எங்கோ வானத்துல அது சிறகடிச்சுப் பறக்குதுங்கற நினைப்பே போதும்.பறவயை நேசிக்கிறவன் அதுதான் செய்வான்.”


இதற்கப்புறம்தான் இவருடைய திரைப்பட பிரவேசமே நடந்தது.


ரோகினியை காதல் மனைவியாக கைப்பிடித்தார்.அன்பின் நிறைவாய் ஒரு மகன். ரகுவரன் தீவிர சாய்பாபா பக்தனாகவும் இருந்திருக்கிறார்.


சில விசயங்களுக்கு காரணம் சொல்ல முடியாததுபோல அல்லது சில விஷயங்களின் அடர்த்தியை அளவிட நமது வாழ்பனுவம் போதாது போல்
அவர் தன் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

அவர் அடிக்கடி தனிமைப் படும்போதெல்லாம் அவரை ஒரு சிலர் (விஜ்ய் கூட) மீட்டிடுக்கிறார்கள்.

அவருடைய தளர்ச்சியை நான் க்ண்கூடாக கண்டது “யாரடி நீ மோகினி” படத்தில்தான்.நிச்சயமாக அது வழக்கமான ரகுவரனில்லை. அதில் எந்த இடத்திலும் அவருடைய கண் சிரிக்கவேயில்லை.தனகுகு மட்டும் பில் கிளிண்டனுடைய சிரிப்பு மட்டுமிருந்தால் போதும் இந்த உலகையே வென்று காட்டுவேன் என்று ஒரு நேர்காணலில் அவர் சொன்னது இன்றுமெனக்கு நினைவிலிருக்கிறது.

பெருமழைகள் ஒயும்போது உண்டாகும்  அமைதியை  வெறும்  வார்த்தை-களைக் கொண்டு நிரப்பிட முடியாது. திரு.ரகுவரனுடைய மரணமும் அப்படித்தான்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ரோகினி சொல்லியிருக்கிறார் “ "எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" ஆகவே ஒரு நல்ல கணவனாகவும்,கலைஞனாகவும்,மனிதனாகவும் அவர் ஒரு நிறை வாழ்க்கை வாழ்திருக்கிறார் என்றே கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: