வெள்ளி, 30 ஜூலை, 2010

கொஞ்சம் பெரிய ஒண்ணு

ஈரானுக்கு மஜீத் மஜ்டி- ன்னா இந்தியாவிற்கு பஷீர். இரண்டுபேருடைய கால கட்டங்கள் , வயது, கலாச்சாரம், வெளிப்பாட்டின் ஊடகம் இவைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இரண்டுபேரும் இந்த உலகத்தை, வாழ்க்- கையை - அதன் வியப்பை, ஏமாற்றத்தை, பரிசை, திருப்பத்தை, கற்றுத்தரும் பாடத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை, தன்னுடைய சுழலை என எல்லா- வற்றையும் பார்ப்பது குழந்தைகளின் வழியாகத்தான். குழந்தைகளின் வழி அவர்கள் சித்தரித்துக் காட்டும் உலகிற்கு ஈடு இணை ஏதுமில்லை.


எதனால் என்று தெரியவில்லை.நிகழ்காலம் என்னதான் இன்பமாக இருந்தாலும், கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிடினும் மனமென்னவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாய்ந்துகொள்வது அந்த நினைவுகளில்தான்.

பஷீரின் ”பால்யகால சகியை”ப் படிக்கையில் ஒரு டைம் மெஷினில் ( Time machine ) ஏறி என்னுடைய பால்யத்தை மறுபடியும் ஒருமுறை சென்று பார்த்து -விட்டு வந்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பாலியம் தொடர்பான பகுதிகள் இரண்டு மூன்று தான் இருக்கும்.இருப்பினும் அந்த நடையின் தொனி தொடும் தூரம் அத்தகையது. மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் ஒரு சிறு துளையி -டுவதைப் போன்றது அவருடைய நடை.போகிற போக்கில் மாட்டின் மூக்கில் மூக்குப் பொடியை தூவி விட்டுச்செல்லும் சிறுவனின் குறும்பைப் போன்ற நடை பஷீருடையது.


சுகறா,மஜீத்..பால்யகாலம் தொட்டே மிக அனுக்கமான நண்பர்கள். ஆனால் இதில் ஆர்ச்சயம் என்னவென்றால் அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வைரீகளாக இருந்தார்களென்பதுதான்.

குழந்தைகளின் மனவோட்டத்தை, குறும்புத்தனங்களை,உடல்மொழியை மற்றும் முக்கியமாக அவர்களுடைய பரிபாஷையை அழகாகத் தந்தவர்களில் என்னளவில் என்னால் சுட்ட இயலுவது இருவரைத்தான்.ஒருவர் பஷீர், இன்னொருவர் சுரா.

பொதுவாக பாலியங்களில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்களையும் அது சுட்டும் பொருள்களையும் நினைத்துப் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். சில சமயம் நம்முடைய அந்த பாலியச் சொற்களுக்கு அர்த்தமே இருக்காது.

// மஜீது வெற்றிக்களிப்புடன் அர்த்தமில்லாத ஒரு சத்தம் கொடுத்தான்,ஜீக் ஜிகு! ஜீக் ஜிகு! // பஷீரின் பெரும்பாலான கதைகளில் இந்த மாதிரி குழந்தைகளின் வெற்றிக்களிப்பு சில அர்த்தமில்லாத சொற்களைத் தான் கொண்டிருக்கும்.

// ஆகாயமும் பூமியும் அறியும்படியாக அவன் கம்பீரமாக அறிவித்தான் “எனக்கு மரம் ஏறத்தெரியுமே’’//

இந்த வரிகளுக்கு முன் இருவருக்குமிடையே ஒரு சிறு போட்டி வரும். சுகறாவை ஏதாவது ஒருவகையில் கூசிச் சிறுக்க வைக்க வேண்டும் என மஜிது, தன் வீட்டைப் பற்றி சொல்லுகிறான்,தன் தந்தையின் பணியைப் பற்றி சொல்லுகிறான்.ஆனால் சுகறாவோ எல்லாவற்றுக்கும் பளிப்பு காட்டி விடுகிறாள். இந்த இடம் கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை நினைவுபடுத்தியது.

பள்ளியில் ஒரு முறை மஜீதுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.1+1=?. மிகச்சிரமப்பட்டு ஒரு விடையை யோசிக்கிறான், கொஞ்சம் பெரிய ஒண்ணு.

இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து, பெரிய நதியாக சேரும்போது இரண்டு தனித் தனி ஒன்றுகள் சேர்ந்து பெரிய ஒன்றாகத் தான் வரவேண்டுமல்லவா...


ஆனால் பஷீரின் ஆசிரியர் என்ன அத்தனை சொற்பமானவரா..மஜீதுக்கு நாலைந்து அடிகள் கொடுத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பெரிய அடியாக நினைத்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார். வாழ்க்கையும் இப்படித்தானே!! ஒரு பெரிய கோட்டை பக்கத்தில் வரைந்து ஏற்கனவேயிருக்கும் கோட்டைச் சிரிதாக செய்வது போல் , ஏதாவது ஒரு பெரிய சோகத்தை கொண்டுதானே இன்னொரு சோகத்தை சிறிதாக்கிக் கொள்ளமுடிகிறது.

பொதுவாக கலைஞர்கள் மஜிதாகயிருக்கும்போது..யதார்த்த வாழ்க்கை அவனுடைய ஆசிரியரைப் போல இருக்கிறது...

சுகறாவைக் கரைக்க மஜீது சொல்லும் அந்த வாக்கியம் எவ்வளவு அழகாக எந்த பண்டிதத்தனமும்,மேதாவித்தனமும் இல்லாமல் வெறும் குழந்தையின் குரலாகவே ஒலிக்கிறது.

//நான் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும்,வாப்பாவும்-உம்மாவும் சும்மா என்னை பறண்டவும்,நுள்ளவும் செய்தாங்க!சும்மா அவுகளுக்கு இது ஒரு சுகம்.இனி நான் மரிச்சுப் போனா அவுங்கா சொல்லுவாங்களா இருக்கும்.அந்த பாவப்பட்ட மஜீது இருந்தான்னா ஒரு நுள்ளாவது குடுக்கலாமென்று//

பாட்டி வீட்டுக்கென நான் கேரளம் பயனிக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டருகே ஒரு ஆறு ஒடும். , சிறு ஒடைப் போலத் தொடங்கி, சற்று பெரிதாகி,மறுபடியும் சிறிதாகி,மறுபடியும் பெரிதாகி கொஞ்ச தூரத்தில் ஒடையாகி..ஒரிடத்தில் தேங்கி பெரிய ஆறாக மாற்றம் பெற்று..சிற்ச் சில இடங்களில் பரந்த மணலில் நுண்ணமான ஒரு வெள்ளிக்கம்பியெனவோ, வைரக்கம்பியெனவோ மாறி இறுதியில் ஏதாவது ஒரிடத்தில் ஒரு பெரிய நீர்பெருக்குடன் கலக்கும்.

வாழ்க்கையும் , பால்ய கால சகியும் இப்படியே.

விக்ரமாதித்யன் கவிதையொன்று வரும்....

பெண்கள் என் பிரதான பலிபீடம்
நான் ஆடாய் அரிவாளாய்

பலிபீடமாய் மாறி மாறி
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

மஜீதும் கிட்டத்தட்ட அவ்வாறே..கைகூடாவிட்டாலும் கைவிட முடியாத நிலையில் பால்யால காதலின்,ப்ரியத்தின் செறிவு கொஞ்சமும் குறையாத சுகறா..அவ்வளவு வறுமையிலும் தன் மகனின் செழிப்பிற்கு வாடும், கிடைப்- பதில் முக்கால் வாசியை மகனுக்கென பங்கு வைக்கும் ,வறுமையைக் காட்டிலும் மகனின் முக வாட்டத்திற்கு வருந்தும் தாய், அண்ணனை எவ்வகை யிலாவது மகிழ்ச்சிப்படுத்த அவன் அமைக்கும் தோட்டத்திற்கு தன் கவலைகள், ஏக்கங்களை மறைத்து நீருற்றும் சகோதரிகள் என...அவனும் மாறி,மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் பஷீருடைய இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கும்.எந்த அதி உன்னதங்களும் பஷீருடைய மாந்தர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு விதி வழியாகத்தான்.அதனால் அவருடைய கதையில் சுபங்களையெல்லாம் எதிர் பார்க்க இயலாது. எனவே வெளிநாடும் செல்லும் ஒரு அனுக்கமான நண்பனின் பிரிவு, திடீரென்று வரும் நண்பனின் மரணம் குறித்த தகவல், காதலித்தவள் வேறொருவனை கரம் பிடிக்கும்,பிடித்த நிகழ்வு , நள்ளிரவு மழைச் சப்தம்-காலையில் அதன் தடயம் என இவற்றில் ஏதாவதொரு உணர்வைத்தான் பஷீரின் கதைகளின் முடிவில் என்னால் உணர முடிகிறது.

சுகறாவுக்குப் பிறகும் தாய் மற்றும் சகோதரிக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சற்றே பின்னகர்ந்து மஜீது மட்டும் தன்னுடைய தந்தையை சற்று அனுசரித்து இருந்தானெனில்......


காதல் மோதலில்தான் ஆரம்பிக்கும் என்று எந்த முட்டாள் சொன்னானோ எனக்கு தெரிந்த பெரும்பாலான நல்ல நட்புகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் மோதலில்தான் ஆரம்பித்தது. அதில் பெண் தோழிகளும் அடக்கம். யாரை நான் கல்லூரிப் பிரச்சனையின் போது முதலில் அடித்தேனோ அவனும் நானும் தான் கட்டிபிடித்து அழுதோம் கல்லூரி இறுதி வருடத்தின் கடைசி தினத்தில்...

எந்த பெண்ணை நான் காயப்படுத்தினேனோ அவளிடமிருந்துதான் முதல் ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம் என் கைக்கு வந்தது.

மன்னிக்கவும்...

தற்போது என்னிடம் கவிதை

எதுவும் இருப்பில் இல்லாததால்

நீங்களாகவே ஒன்றை கிறுக்கிகொள்ளவும் என் சார்பாக...

என்று எழுதியதைப் படித்துச் சிரித்த அந்த பரிச்சையமில்லாத தோழி இப்போது எங்கே இருக்கிறாளோ..

Be a tower,stand for ever என்று எழுதித் தந்தவள் என்ன செய்துகொண்டிருக்- கிறாளோ..

”இரு இரு உன்னை டீச்சர்கிட்ட சொல்லி என்ன செய்யறேன்னு பாரு” என்று உடைந்த வளையல்களோடு சென்றவள் புகார் செய்ததாக ஒரு முறைகூட அந்த டீச்சர் என்னை அழைத்ததேயில்லை...


வைக்கம் முகம்மது பஷீர் :

நான் இவரைப் பற்றி படித்தது மற்றும் கேள்விப்பட்டது வரையில் இவரை சில வரிகளில் சித்திரமாக்கிவிடலாம்.

தாழ்வரம் சற்றே சரிந்த வீடு..
முற்றத்தில் மங்குஷ்தான் மரம்.
அதன் நிழலில் ஒரு சாய்வு நாற்காலி..
நாற்காலியில் சாய்ந்த ஒர் உருவம்தான் பஷீர்...

ஒரு மழை நாள் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வீட்டின்பின்புறம் சென்றிருக்கிறார் பஷீர்..அப்போது வானில் மின்னல் வெட்டியதில் யாரோ தன்னை படம் பிடிக்கிறார்கள் என்று போஸ் கொடுத்தார் என்று இவரைப் பற்றி ஒரு பகடி மதராசப் பட்டினம் படம் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தது.இது உண்மையா (அ) இட்டுக்கட்டப்பட்ட பகடியா என்று தெரியவில்லை.


1908 ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தலையோலப் பரம்பில் பிறந்தார். 10 ம் வகுப்பு ப்டிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர்.இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியான உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப்போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ்,கோழிக்கோடு கோட்டயம், கொல்லம் மற்றும் திருவனந்தபுர சிறைகளில் தண்டனைகளை அனுபவித்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச்செயல்பட்டார்.அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கையும் துவங்கினார்.

பத்தாண்டு காலம் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்கா,அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றித்திரிந்தார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று கூறலாம்.இந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இமயமலைச் சரிவுகளிலும்,கங்கை நதிக்கரையிலும் இந்துத்துறவியாகவும், இஸ்லாமிய சூபியாகவும் வாழ்ந்தார்.

மனைவி : பாபி பஷீர். மக்கள் : ஷாஹீனா, அனீஸ் பஷீர்.
1994 ஜீலை 5ம் தேதி காலமானார்.

”அம்மே உம்ம காந்தியை ஞான் தொட்டு ” என்று ஒடி வந்த பஷீரை “நான் பஷீரைத் தொட்டேன் தெரியுமா” என்று சுராவிடம் பகிர்ந்ததாக ஜெயமோகன் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை மிக கவர்ந்த எழுத்தாளர்களிர் பஷீர் மிகமுக்கியமானவர் என்று இவரைப் பற்றி ”புன்னகைகளின் பெருவெளி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீரிய வாசிப்பு பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய எழுத்தாளர் பஷீர். இவருடைய மதிலுகள் என்ற நாவல் மம்முட்டி நடித்து திரைப்படமாகவும் வந்துள்ளது.


மேலே உள்ள அவரின் வாழ்க்கை குறிப்பை கண்ணுறும்போதுதான் தெரிகிறது..
அவரும் புரட்சியாளாராக, எவற்றிலும் நிறைவுகொள்ளாதவராக எவ்வளவு தீவிரமாக திரிந்தாரோ அதை விட தீவிரமாக அமைதியாக அமர்ந்து மிகப் பெரும் படைப்புகளைத் தந்துள்ளார். அன்பில் நிறைந்தார் அதுவே பின் படைப்பாகியது.அதுவே அவரை இவ்வளவு காலம் கழிந்த பின்னும் நம்மைத் தொடுகிறது.

குளச்சல் மு. யூசுப்

இந்தக் கதையை மேற்கூறிய படி நான் உள்வாங்குவதற்கு முக்கிய காரணம் இவர்தான்,இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர். பொதுவாக மற்ற துறை -களின் மொழிபெயர்ப்பிற்கும்,இலக்கிய மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. பின்னது சற்று சிரமமானது.சில சமயங்களில் அபாய -கரமானதும் கூட...பஷீரைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் புதிதாக வாசிக்கும் வாசகர்கள் பஷீரை- பஷீராகவே சென்றடைய வேண்டும்.இந்தக் கதையின் எந்த ஒரிடத்திலும் நான் பஷீரை தொலைக்கவேயில்லை. எனவே -தான் நான் இந்தக் கதையில் மீறப்பட்டிருக்கும் சமூகத்தின் நியதியையோ (அ) ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளையோ பற்றி பேசவில்லை.

காரணம் மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் ஆறு அதன் கரையை அதுவாகவே விரிவுபடுத்திக்கொள்கிறது. மனிதனின் முயற்சிகளனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு அதனிடம் சரணடைவதாகவே உள்ளது. வாழ்க்கை, சமூகம் அதைத்தொடர்ந்து வரும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.இதை பஷீர் அறியாதவரா என்ன?...


மு. யூசுப் - மொழிபெயர்ப்பு என்ற அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மேல் அனாசயமாக நடந்து கடந்திருக்கிறார்.

இதே புத்தகத்தைப் பற்றி அருமை நண்பர் திரு.முரளியின் பகிர்வு இங்கே..பால்யகால சகி

சனி, 24 ஜூலை, 2010

பொன்மாலைப் பொழுது ..

வெங்கட் சுவாமிநாதன் :

மகுடேசுவரனின் குரல் மிருதுவானது.பாசாங்குகள் அற்றது.பல ரூபங்களில் பல தொனிகளில் வெளிப்படுவது .

கல்யாண்ஜி :

இவருடைய கவிதைக்குரல் யாருடைய குரலையும் ஞாபகப்படுத்தாத எப்போதாவது கேட்கிற சீரியக்குரல்.

ஞானக்கூத்தன் :

இரத்தத்துடிப்புள்ளவை இவருடைய கவிதைகள்.
மேற்க்கண்ட கூற்றுகளுக்கு முற்றிலும் தகுதியான திரு.மகுடேசுவரன் அவர்கள், தொன்னூறுகளில் கனையாழியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து இன்றளவும் இயங்கிவருகிறார். ஏனெனில் கல்யாணத்திற்கு பிறகு கானாமல் போன படைப்பாளிகள் ஏராளமானோர் என்று திரு.சுந்தரராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.மகுடேசுவரன் என் பக்கத்து ஊர்க்காரர்(திருப்பூர்). இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம்” தான் ( 2002 ) நான் முதன் முதலில் படித்தது. (இதற்கு முன்பே “ பூக்கள் பற்றிய தகவல்கள்” “அண்மை “ என்ற இரு கவிதை தொகுதிகளும் வெளிவந்து அதன் மூலம் தமிழ் இலக்கிய சூழலில் பரவலாக அறிப்பட்டிருந்தார்) அப்போதிருந்தே இவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து, அதற்கு முயற்சித்து, ஒரிருமுறை நேரிலும் பார்த்துவிட்டேன். இது நடந்தது 2004-2005 கால கட்டங்களில்.

அப்போதெல்லாம் இலக்கிய ஆளுமைகளை, பிரபலங்களைச் சந்திப்பதில் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன். எனவே இவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளவேயில்லை.

இது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறிக்கொள்கிறேன். தமிழின் சமீபகாலத்தின் முக்கியக் கவிஞர், திரு.சுஜாதா அவர்களின் செல்லக்கவிஞர் இவருடன் நல்ல நட்பு இருந்திருந்தால் கவிதைப் பற்றிய என்னுடைய பார்வைகளில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் திருப்பூர் வலைப்பதிவர் (சேர்தளம்) குழுமம் வரும் ஞாயிறு அன்று (25/7/10) இவருடைய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. http://tiruppur-bloggers.blogspot.com/2010/07/blog-post.html.

மேற்க்கண்ட சந்திப்பில் திருப்பூர் குழுமத்தின் ( சேர்தளம் ) உறுப்பினன் என்ற முறையில் எனக்கும் கிடைக்கும் இந்த வாயப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலிருக்கிறது.
இதைப்பற்றி திரு.பரிசல் அவர்களின் பதிவு : கவிஞருடன் ஒரு சந்திப்பு!

இவரைப் பற்றி எனக்குத் தெரிந்த சில குறிப்புகள் இங்கே :

> இவர் கவிதை மட்டுமல்ல இவரும் , இவருடைய குரலும் மிருதுவானதுதான் என்று திரு.சுப்ரபாரதி மணியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”கனவு” கூட்டத்தில் இவர் ஒருமுறை உரையாற்றியது போதுதான் தெரிந்தது.

> மேற்ச்சொன்ன கூற்றில் இவர் உண்மையிலேயே மிருதுவானவர்தானா!!! என்று எனக்கு ஐயம் ஏற்படுத்திய கூட்டம் : இவருடைய ”காமக்கடும் புனல்” புத்தக வெளியீட்டின் போது இருந்த இவருடைய தோற்றம்.ஏனெனில் அதற்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவருக்கு அவ்வளவு பெரிய மீசையில்லை.

இந்தக்கூட்டத்தின் இன்னொரு மறக்கமுடியாத சம்பவம் என்னுடைய இன்றைய ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான திரு.யுவன் சந்திரசேகரைச் சந்தித்தது.இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு எழுத திட்டம்.

அ.முத்துலிங்கம் ஒரு முறை பிரபலங்களுக்கு பிடித்த புத்தகம்,அது ஏன் என்ற முறையில் தொகுத்து வெளியிட்ட புத்தகம் “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.” இது திரு.ஜெயமோகன் அவர்களால் ”மணல் கடிகை” என்ற புத்தகத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். இந்த ”மணல் கடிகை” எழுதியவர் திரு.எம்.கோபால கிருஷ்ணன் என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த புத்தக வெளியீடு நடந்தது மேற்ச்சொன்னக் ”காம கடும்புனல்” புத்தக வெளியீட்டின் போதுதான்.

> இவருடைய “யாரோ ஒருத்தியின் நடனம் “ என்ற தொகுதியில் என்னைக் கவர்ந்த சில கவிதைகள் :கடைசிவரைத் தொடர்வேன்
என்பது ஐயமே
வளைவுகளிலும் சந்துகளிலும்
புகுந்துசெல்லும் உன்னை
*

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமலே போகலாம்
இன்னொரு மழை
*

பொருட்படுத்தாதீர்கள்
தனது அறைச் சாளரத்தை
அகலத் திறந்து வைக்காதவன்
கூறும் அபிப்ராயங்களை
*
அடிவானம் தெரியாத சந்தில்
ஒரு பூச்செடியும்
இல்லாத வீட்டில்
ஒருவன் வசிக்க நேர்ந்தால்
அதைச் சாபம் என்க

*

முல்லையின் அமில மணமும்
மூத்திரத்தின் கார நெடியும்
கலந்த வாசனை
புணர்ச்சியின் வாசனை
அது நிறத்தால் நெருப்பு
குணத்தால் தண்ணீர்.
*

புணர்ந்து வெளியேறியவர்கள்
தாம் புத்தரும் சித்தரும்
*

புணர்ச்சிக்குப் பின்பு
சுருங்குகிறது கனிவு
தடிக்கிறது உத்தரவு

*

சமூக விதி இதுதான்
புணர்ந்து விட்டால்
மணந்துகொள் அல்லது
மணந்து கொண்டு
புணர்ந்துகொள்

*

நல்லறுவை செய்த
நனிமாது நண்பா கேள்
கள்ளக் கலவிக்குத் தோது

*

கள்ளப்புணர்ச்சி ஒன்று
ஊரறிந்துவிட்டது
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு

*

உறங்கும் குழந்தை
சிணுங்கி எழுந்து
முடித்துவைக்கட்டும்
கருத்தரிப்பில் முடியாத
மலட்டுத் தம்பதியரின்
புணர்ச்சி நாடகத்தை

*

வியாழன், 22 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

நாயொன்றின் மீது
பிரியம்...வீட்டினுள் என்பதால்
உயர்சாதியே தேர்வாகிறது..
முதலில் உணவு, பிறகு
உங்களின் மொழியென பழக்குகிறீர்கள்....
நாயும்  தவழ்கிறது நன்றாகத் தரையில்
கூட நாவில்.....
நாயும் பெரிசாச்சு..
வீட்டுக்கு காவலாச்சு ...
தெருவை மிரட்டலாச்சு...
கதவை நீக்கும் போதே குரைக்க,
நுழைந்த பின் முகர்ந்து பார்க்க,
வால் குழைத்து சினுங்க,
ஒலிக்குறிப்பிற்கேற்ப அமர,ஆர்பரிக்க
தோள்களில் முன்னங்கால்களை வைக்க
என நாயும் பழக்கிக்கொண்டது

தட்டுச்சோற்றுக்கும்,வயிற்றுப்பாட்டுக்கும்...

அவ்வப்போது கண்ணில் இடறியதால்
நீக்கியாகிவிட்டது வாலையும்...
இப்பொழுதும் இறக்கை கட்டுகிறது உங்கள்
பேச்சு நாய்கள் மேலான உங்கள் பிரியம் சுட்டி..

நின்று  முகர்ந்து,வெரித்து
”நாய்கள் ஜாக்கிரதையை”
ஈரமாக்கிவிட்டுப்போகும்
இன்னும் சுயம் திரியாத
நாயொன்று...

வியாழன், 15 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து

என் வீட்டருகே இரண்டு மரம்.
ஒன்று நெட்டைப் பாவாடைப் போட்ட
குட்டைபெண்னென...
எல்லா நிழலையும் இழுத்து இழுத்து
தன் காலடியிலேயே நிறுத்தி வைத்திருக்கும்.


மற்றது குட்டைப் பாவாடைப்போட்ட நெட்டைப்
பெண்னென..
கைக்குட்டையளவு நிழலில் ஒற்றைக் காலையூன்றி
எத்தி் நின்றவாறிருக்கும்...

சனி, 10 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து..
கனவுகள் கலைந்து போகும்...

பளிச்சென மின்னலாய் வெட்டும்

மறுப்பின் நொடி..

இடிக்கத் தொடங்கும

இல்லாமல் போன இந்நிமிடங்கள்..

சட்டென தொடங்கும் ஞாபகமழை

நனையத்தொடங்கும்

மனம்..

ஈரத்தில் நனைந்த நிமிடங்கள்

வெடவெடக்கும் கடிகாரத்தில்..

நமுத்துப்போய்க் கிடக்கும்

ஆற்றாமைகள்..

தவறிய விரல் மீண்டு வாய்வருவதற்குள்

பிரளயத்தை புரட்டும் குழந்தையென

எல்லாமும் நிகழ்த்திவிட்டு்

மெல்ல திரை விலகும் நேரம்

கனுக்காலிலிருந்து

ஊமைக் கண் சிமிட்டும்...

உன்னை மட்டுமே ஞாபகமூட்டும்

பக்கத்துவீட்டுப் பெண்ணின்

கொலுசொலி..

சனி, 3 ஜூலை, 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து...

விரிவின் எல்லைக்கே

சாத்தியப்படும் கவிதையின்

திறப்பு போல

தினமும் உன் இதழ்கள்

மொட்டவிழ்க்கும்

ஒரு புன்னகையை

எனக்கென்று*********************************


வெள்ளியில் மினுங்கும் மேகம்..

நீலத்தில் நிறையும் வானம்...

அந்தியில் கவிழும் ஏகாந்தம் (அ) துக்கம்...

இரகசியத்தின் இரைச்சலில் துவங்கும் இரவு..

மின்மினிகளாய் இரைந்து கிடக்கும் பூமியின் பொய்கள்...

வயிற்றுப்பாட்டுக்காரனின் வட்டிலாய் நிலா...

சூரியப் பூவிதழ்கள் அவிழும் காலை....

ஒற்றைக் கண்ணில் எல்லாமும் படம் பிடித்து மூலையில்

முடங்கும்...

பிரதிகள் தாவும் நாற்புறமும் இறக்கைகள் இன்றி

இரண்டு கண்களில் வியந்து,

முகரும் பாதைவழி விரையும் நாயாய்

அன்றையத் தேவைகளை இருத்தி நகரத்துவங்கும் வாழ்வு..

நேர்கண்டு இரசிக்க இருக்கிறது மூப்பென

அவ்வப்போது எழும் ஆசைகளையும்

கரையொதுக்கி போகும் புத்திஜீவிதம்...

*************

வெள்ளி, 2 ஜூலை, 2010

இழப்பின் வலி
A place you leave is a place that lives forever.

மேல இருக்கறது இந்தப் படத்தோட ஒரிஜனல் கேப்சன்.ஆனா நான் இந்தப் படத்திறகு வேறொரு கேப்சன் ரொம்பப் பொருத்தமா இருக்குனு நினைக்கிறேன்.

”காதல் என்றால் உயிரையும் தருவேன்.சுதந்திரமென்றால் நான் காதலையே தருவேன்”. சொன்னவருடைய பேரு சட்டுனு ஞாபகத்திறகு வரலை.இந்த கேப்சனுக்கு ரொம்பவே பொருத்தமான படம் தான் “ THE LOST CITY”.

கதை நிகழும் இடம் கீயூபா.புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் பிடல்காஸ்டோரோ அதைத் தக்க வைப்பதற்கான சில கண்டிப்பான நடவடிக்களை மேற்கொள்ளும்போது,அதனால் சிதைவிற்குள்ளாகும் ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதையிது.

பொதுவாக நம் உலகத்தில், எல்லாருக்கும் நல்லவனாகவோ,எல்லோருக்கும் நன்மைத் தரக்கூடிய செயல்னோ எவரையும்,எதையும் சொல்ல முடியாது. அதனால்தான் மாபெரும் இலக்கியங்கள, நிகழ்வுகள் அதனூடான மனிதர்களின் அலைகழிவுகள் என அவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறதே ஒழிய தீர்வுகளைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாருக்குமான ஒன்றை எவராலும் சொல்ல முடியாது என்பதே உண்மையாகப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் நன்மைக்காக ஒருவனை பலி கொடுக்கலாம்,ஒரு ஊரின் நன்மைக்காக ஒரு குடும்பத்தை பலிகொடுக்கலாம்,ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே பலி கொடுக்கலாம் அப்படீனு சொன்னார் காந்தி.

ஆனால் தனியொருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் அப்படிங்கிறாரு பாரதியார்.

எதனால் இந்த வித்தியாசம்.என் அபிப்ராயப்படி,முன்னவர் ஆண்மீகத்தின் பாதையில் இருந்தவர்.பின்னவர் இலக்கியத்தின் பாதையில் இருந்தவர்.


பொதுவாக கலை எப்போதுமே பெரிதும் பேசுவது மனிதர்களையும், மனிதத்தையும்,இதற்கிடையில் ஊடாடும் அவர்களின் உணர்வுகளையுமே...

மனிதர்களையும்,அவர்களுடைய உண்ர்வுகளையும் நிராகரிக்கிற எதுவுமே கலையாகாது.

கலில் கிப்ரான் ஒருமுறை தன் காதலியிடம் : கடவுள் திடீரென்று உன் முன்னால் வந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாமே மறந்து போகப் போகுது..கடைசியா 5 வார்த்தைகள் மட்டும் உன்னோட ஞாபகத்தில் இருக்கும்,உனக்கு விருப்பமான வார்த்தைகளைக்கூறு அப்படீன்னு சொன்னா நீ சொல்லும் 5 வார்த்தைகள் என்ன? என்கிறார்.

கலில் கிஃப்ரானின் காதலி : வானம்,காற்று,பூமி..ம்ம் மீதி..அப்படீன்னு யோசிக்கிறப்ப கிப்ரான் டக்னு சொல்றார் நீ மற்றும் நான். ஏன்னா இந்த இரண்டும் இல்லைன்னா மேலே நீ சொன்ன மூன்று வார்த்தைகளுக்கும் அர்த்தமில்லை.

எவ்வளவு உயர்வானதெனினும்,எவ்வளவு பிரம்மாண்டமெனினும் அதை அதை அவ்வாறு உணர ஒரு உயிர் இருக்கும்போது மட்டுமே அது அர்த்தம் பெறுகிறது.

அதுபோலத்தான் நம்மில் ஆன்மா என்ற ஒன்றை இழந்துவிடும்பொழுதில் நம்மைச் சுற்றியுள்ளவற்றுக்கும் நமக்கும் அர்ததமில்லாமல் ஆகிறது.

அப்படிப்பட்ட அந்த ஆன்மாவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்தப் படத்தின் நாயகன் என்னன்னவற்றையெல்லாம் இழக்கிறான்.பெற்றோர்,வீடு,உறவு,தொழில்,நண்பர்கள்,வளர்ந்த இடம் என..தான் நேசித்த பழைமையுடனும்,உயிர்துடிப்பான இசையுடனும் திகழந்த நகரமில்லை,இப்போது தான் வாழ்ந்துகொண்டிருப்பது. தன்னுடைய தனித்துவத்தை இழந்து வரும் அந்த நகரில் நசுங்கிடப்பதைவிட தன்னுள் எல்லா அழகுடன் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையும்,அதனோடு ஒன்றியிருக்கும் தன் ஆன்மாவையும் உயிரோட்டத்துடன் வைத்திருப்பதற்காக அந்த நகரைவிட்டு வெளியேறுவதே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து அதனை செயல்படுத்துவதே கதைச்சுருக்கும்.

ஆண்டி கார்சியா( Andy García ): இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன்.அவருடைய பதினாறு ஆண்டுகளின் கனவாம் இந்தப்படம்.

இனி படத்தில் என்னைக் கவர்ந்த சிலக் காட்சிகள் :

> ஹீரோவோட கிளப்பை அதிகாரிகள் மூட வருவார்கள்.அந்த சமயத்தில் ஹீரோவுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் உரையாடலின் போது கிளப்பை மூடுவதற்கான காரணங்களில் அவர்கள் கையில் வைத்திருக்கும் சாக்ஸஸ் போனும் ஒரு காரணமாகிறது.(Castro, has declared the saxophone to be an imperialist instrument and forbids its use)

> கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஹீரோ அப்பா-அம்மாவிடம் விடைபெறும் காட்சி.தந்தைக்கும் மகனுக்குமான இடையிலான அந்த காட்சி அவ்வளவு நேர்த்தி.

> நீங்க ரொம்ப வருசமா ஆசை ஆசையா வளர்த்த அல்லது சொந்த மகன்/மகளுக்கு மேல நினைக்கிற ஒன்னை திடீர்னு ஒரு நொடியில் ஒருத்தர் உங்க முன்னாடி வந்து இனிமே இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமில்லே..இனிமே அது எனக்குமட்டுமே சொந்தம்னு சொன்னா உங்களுக்கு எப்படியிருக்கும்.அப்படித்தான் கரும்புத்தோட்டத்தில் தன் மாமாவிடம் ஹீரோவோட சகோதரன் சொல்ற காட்சி..அதுக்கப்பறம் நேரும் மரணம்..அதனால் உண்டாகும் குற்ற உணர்வு...

> அமெரிக்காவில் ஒட்டல் தொடங்கறதப் பத்தி தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வேலையைப் பற்றி அவர் சொல்ற காட்சி...

> சில வருடங்களுக்குப் பிறகு அதே ஓட்டலில் தரையை சுத்தம் செய்திகிட்டிருக்கிறப்போ, அவருடைய காதலி அவரைப் பார்க்க வர்ர அந்த காட்சி..அந்த சமயத்தில் அவங்களுக்குள்ளாற ஏற்படற அந்த உணர்வுகள்.. காதலியாக மட்டும் அறிமுகமானவள் இன்று அரசியலில் முக்கியபுள்ளி, நெடு நாள் இடை வெளி வேற.. அவகிட்ட எப்படி பழையபடி அதே அன்னியோன்னியமா நெருங்கிறது..மறுபடியும் காதலியின் அழைப்பு..மறுபடியும் இவரோட மறுப்பு..எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..இப்ப நினைச்சாக்கூட தன் காதலியோட புறப்பட்டுப் போய் அவளின் மூலமா ஒரு அதிகாரத்துடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கையை வாழமுடியும்,எந்த தடையுமில்லை.ஆனாலும் காதலியைக் காட்டிலும் தான் தானாகவே இருக்கறதுதான் முக்கியம் அப்படீன்னு தன் காதலியின் அழைப்பை மறுபடி ஒருமுறை நிராகரிக்கிற அந்தக் காட்சி...ரொம்ப அபூர்வமான மனிதர்களால் மட்டும்தான் இது முடியும்.

இந்தக் காட்சியைப் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் இந்தக்கருத்து எனக்கு மிக ப் பிடித்தால அதை அப்படியே இங்கே தருகிறேன-He(ஹீரோ) now realizes that Aurora(ஹீரோயின் பேரு) is Cuba: beautiful, alluring, but ultimately unattainable

> கடைசியா கையில் ஒரு ரோஜாவை வச்சுட்டு அப்படியே ஒவ்வொரு படியா ஹீரோ மேல ஏறரப்ப அந்த காட்சியின் பின்புலத்தில் ஒரு பாட்டுவரும்,அந்த பாட்டு..அதுக்கு அவர் கொடுக்கற அந்தச் சின்ன பேஸ் எக்பிரஸ்னோட கூடிய அந்த மூவ்மெண்ட்... அந்த காட்சிக்காவே படத்தை எத்தனை தடவ வேணாலும் பார்க்கலாம்...


>தனக்குப்பிரியமான அப்பவோட கைக்கடிகாரத்தைக்கூட எடுத்துப்போக அனுமதிக்காத கீயூபாவின் அதிகாரிகளை கோபமாகவும்,வாட்சை ஏக்கமாகவும் பார்க்கிற காட்சி..

மொத்தத்தில் என்னை மிகவும் கவர்ந்த,இம்சித்த மற்றும் சிலவற்றை யோசிக்க வைத்த படங்களில் இதுவுமொன்று.