வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு சிறு குறிப்பு....

வழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது  தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும்,  நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....

இந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.

அதிலும்  தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள்  இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....

கையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....

மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...

வாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..

எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...

ஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.

 அணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...