வெள்ளி, 14 மே, 2010

சில மின்னல்கள்...

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பொதுவாக எல்லாத்துறையிலுமே ஒரு முக்கியமான பிரச்சனைவரும்.இனி அடுத்து என்ன?  இந்த கேள்விக்கு யார் தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்களோ அவர்களால் மட்டுமே அந்த துறையில் தொடர்ந்து நீடிக்க இயலும்.


இது படைப்பு துறைகளில் இருப்பவர்களுக்கு ரொம்பவே பொருந்தும்...அந்த அந்த கால கட்டங்களுக்கேற்ப ரசனை, கருத்து, உடை, உறவுமுறைகள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் முதலிய பலவும் மாறுதலுக்குள்ளாகும், விமர்ச்சனத்திற்குள்ளாகும், கேலிக்குள்ளாகும், மேன்மைக்குள்ளாகும்..இது தவிர்க்க இயலாது.


ஒரு காலகட்டத்தில் நம்மை ஆச்சரியத்திற்கும், அதிசயத்திற்கும் உள்ளாக்கிய விட்டலாச்சாரிய படங்கள் இன்றளவும் மனசிலேயே நிற்கிறது. ஆனால் இப்பொழுது வருகிற படங்கள் அந்த மாதிரியான எந்த உணர்வையுமே தருவதில்லை.ஒரு விலகலையே உண்டுபன்னுகிறது.


அதனால்தான் எல்லோராலும் ரொம்பவும் பாரட்டப்பட்ட அவதார் மற்றும் ருத்ரம் போன்ற படங்களை எனக்கு பார்க்கப்பிடிக்கவில்லை..


திரைப்படமென்பது ஒரு மிக முக்கியமான ஊடகம். ஒரு வெற்றுத்தாளில் இருக்கும் சாத்தியங்கள் அனேகம்.அது யாருடைய கையில் இருக்கிறது என்பதே.ஒரு சித்திரக்காரனின் கையிலும், ஒரு கவிஞனின் கையிலும், அதுவே ஒரு மளிகைக் கடைக்காரனின் கையிலும், ஒரு குழந்தையின் கையிலும்.பயண்னென்னவோ எல்லோருக்குமுண்டு. அதுபோலவே நவீன காலங்களில் எல்லா கலைகளுக்கும் நிகழ்கிறது.


தான் பார்த்து,கேட்டு,படித்த,ரசித்த விஷயங்களை உட்கிரகித்து தன்னுடைய சுய அனுபவம் சார்ந்து தனக்கென்று ஒரு தனி வழியை நேர்மையாக தேர்பவர்களைக் காலம் ஒரு போதும் மறப்பதில்லை.


எனக்கு அப்படித் தேர்ந்த ஒரு நவீன கால நல்ல திரைப்பட கலைஞனாக திரு.ஜீவா அவர்களை மிகவும் பிடிக்கும். நான் கல்லூரி முதலாமாண்டு படித்திக்கொண்டிருந்தேன்.அப்போதுதான் 12B படம் வந்திருந்தது.


(கலையென்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆவணம்.இது திரப்படங்களுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.நான் கல்லூரி முடித்து கிட்டத்தட்ட 7ஆண்டுகள் ஆகிறது.அதன்பிறகு எத்தனையோ சம்பவங்கள்.இத்துனைக்கும் பிறகு எப்பவாவது கல்லூரி நாட்களின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை நினைவுபடுத்த நினைக்கையில் அது எந்த ஆண்டு என்று நினைவு கூர்வதற்கு அப்போது பார்த்தத் திரைப்படங்கள் தான் துணை நிற்கிறது.)


படத்தைப் பார்த்தயெல்லோருமே புரியவில்லையென்ற பொன்மொழியைத்தான் உதிர்த்தார்களேயன்றி படத்தின் ஒரு புது முயற்சியை யாரும் புரிந்துகொணடதாகத் தெரியவில்லை.வரவில்லை, புரியாது என்று சொன்ன நண்பனை,நாம் ஒவ்வொரு காட்சியின்போதும் விவாதித்து தெரிந்துகொள்ளளாம் என்று கூறி அழைத்துச்சென்றேன்.

ஆனால் படத்தின் ஆரம்பித்திலேயே  தன்னிலை விளக்கமாக கதையோட்டத்தின் யுக்தியைப் பற்றி திரு.ஜீவா கூறியது படத்தை வெகு சுலபமாக்கியது.ஒரிரு சிறிய தவறுகளைத் தவிர அந்த புதிய கதைசொல்லும் பாணியை மிகச்சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். இதுனுடைய சற்று மேம்பட்ட வடிவத்தின் ஒரு சிறு கூறே விண்.வரு.யாவின்  இறுதிக்காட்சியென்பது என் கருத்து.

ஷியாமிற்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.படத்தின் காட்சியமைப்பு,பாடல்கள்,தேவையான அளவு வசனங்கள் என்று மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது.இன்னொன்று கதை சொல்லும் முறையில் ஒரு சாதரணமான அனுகுமுறை, நல்ல நண்பர்கள் இருவர் பிடித்தமான் உணவுப்பண்டங்களைக் கொறித்து கொண்டே சில விஷயங் களைப் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

குறிப்பாக ஒரு கல்யாண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு வரும் ஒரு இசை அவ்வளவு அருமையாகவும் புதுமையாகவும் இருக்கும்.அது உள்ளூர் வாத்தியங்கள் மற்றும் மேனாட்டு வாத்தியங்களின் கலவையென  அற்புதமாகயிருக்கும்.

அதன்பிறகு அவருடைய படங்கள் வந்தால் தவறவிடுவதில்லை...

முதலில் எடுத்து சிறு பிரச்சனை காரணமாக 12Bக்கு அப்புறம் வந்த படம் உள்ளம் கேட்குமே.ஒரு கல்லூரி மாணவர்களின் நட்பு,காதல்,சில மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் கல்லுரிக்குப் பிறகு யெல்லோரும் ஒன்றுகூடும்போது அதை நினைத்துப்பார்க்கும் சில துளிகள்..

வகுப்பறையையே காட்டாமல் விளையாட்டு மைதானங்கள், கோவில், விடுதியறை மற்றும் வீடு என்று எடுக்கப் பட்ட படங்களில் இதுவுமொன்று.ஆனால் ஒரு சில அழகான விஷயங்களின் மூலம் இதை தனித்துவப்படுத்தி ஜீவாவின் படமென்று நினைக்க வைத்திருப்பதே அவரின் வெற்றி.

அடுத்து வந்த அவரின் படம்தான் என்னை பெரிதும் கவர்ந்த “உன்னாலே உன்னாலே” திரைப்படம். அவருடைய படங்களில் இது முக்கியமான படமென்பது என் அபிப்ராயம்.

இந்த படத்தின் காட்சியமைப்பு மற்றும் பாடல்கள் அற்புதமாக இருக்கும்.குறிப்பாக ஆஸ்திரேலியா.நிறைய படங்களில் ஆஸ்திரேலியாவை பார்ந்திருந்தாலும் இவர் காட்டிய ஆஸ்திரேலியாதான் என்னை பெரிதும் கவர்ந்தது.

 ஊட்டிக்கு : பாலுமேகேந்திரா,சம்பல்,லடாக் பகுதிக்கு : பி.சி. செம்மண் புழுதிக்காட்டுக்கு : ராம்ஜி மாதிரி ஆஸ்திரேலியாவுக்கு : ஜீவாவைச் சொல்லலாம்.

முதல் நாள் இன்று..பாடலில் வினய் புகைத்துக்கொண்டே சோம்பல் முறித்து பாடும்போதும்,பாட்டின் தொடக்கத்தில் பூங்காவின் ஒரு இருக்கையில் அமர்ந்திருப்பதும்,தீடீரென்று ஒரு புதிய மனிதருடன் அந்தப் பெண் கைகோர்த்துப் பாடுவதும்..தோழியின் திருமணத்திற்கு வெறுங்கையுடன் சென்று பரிசுப்பொருளுக்குப் பதிலாக பாட்டையே பரிசாக்கித்தருவதும்..சதாவை காத்திருக்க வைத்து அதைப் பார்த்து வினய் ரசித்துக்கொண்டிருப்பதும், சதாவின் முகவரியைக் கண்டுபிடிக்க வாகனத்தை விபத்துக்குள்ளாக்குவதும் என ஒவ்வொரு காட்சியிலும் ஜீவா தன் முத்திரையை பதித்திருப்பார்.

தாம்தூம் நிச்சயம் அவருடைய பாணியிலான படமில்லை என்பது என் வரையிலான கருத்து.எனவே அப்படத்தைப் பற்றி நான் கருத்தேதும் கூற விரும்பவில்லை.

இவரிடமிருந்து இன்னும் சில பல நல்ல படைப்புக்களை எதிர்நோக்கிக் கொண்டுக்கையில்தான் இடியென அந்த செய்தி வந்து சேர்ந்தது.ஜீவா திடீரென்று மாரடைப்பால் படப்பிடிப்புக்கிடையில்(???) காலமானாரென்று.

அனேகமாக அவருடைய வயது அப்போது 42இருக்குமெனவும்,அவருடைய தந்தையும் அதே வயதில் மாரடைப்பால்தான் காலமானார் என்பது ஒரு  நண்பரின் மூலம் கேட்டறிந்தது மேலதிக செய்தி.

மரணம் தவிக்கப் தவிக்கப் பற்றுபவர்களில் சில சமயங்களில், நமக்கு பித்தமானவர்களே பெரும்பாலும் இடம்பெறுகிறார்கள்.

உயிரிணங்களில் மனிதர்கள் மட்டுமே தனக்கான ஒரு தடயத்தை விட்டுச்செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்.அந்த தடயத்தின் அழுத்தம்  அவரவர்களின் வாழ்வைப் பொறுத்தது. ஜீவாவின் தனது படைப்புக்களின் மூலம் அழுத்தமான தடத்தையே விட்டுச்சென்றிருக்கிறார்.

ஜீவாவின் படங்களை நான் பொருட்படுத்துவதற்கான காரணங்கள் பின்வருமாறு :

*அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு நடையைக் கையாண்டது.

* வக்கிரக்காட்சிகளோ (அ) நீதி போதனைகள் போன்ற விசயங்களோ இவர் படத்தில் இருப்பதில்லை.

* கதைக்கென்று பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் மனிதர்களின் ஒரு சில குணாதிசயங்களை மட்டுமே மைய கருத்தாகக் கொண்டு படமெடுப்பது.

* பாடல்கள்,காட்சியமைப்புகளில் தெரியும் அவருடைய ரசனை.12B படத்தில் “ஒரு புன்னகைப் பூவே” என்ற பாட்டில் அவருடைய உதவியாளர்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களை இவர் பங்கேற்கச் செய்தது இவருடைய இந்தக் குணம் என்னை வெகுவாக கவர்ந்தது.

* இவருடைய படங்களை “பெப்பி ஸ்டைல்” என்று கூறக் கேட்டதுண்டு. 

* அவருடைய படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள். குறிப்பாகச் சொல்வதானால் “உன்னாலே உன்னாலே” படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு இவருடைய இயல்பை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

ஜுன் போனால் என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் ஒரு சில வரிகளைத் தவிர மிச்சம் உள்ள வரிகளெல்லாம் அவருகென்றே எனக்குத் தோன்று-கிறது. நினைவிலிருந்து சில வரிகள் :

“நேற்றுயென்பதும் கையில்யில்லை நாளையென்பதும் பையில்யில்லை

இன்று மட்டுமே மிச்சமுண்டு தோழா..ஆஹா மொத்த பூமியும்

கூத்துக்காகத்தான்...அறைக்குள்ளே மழை வருமா. வெளியே வா குதுகலமா

இந்த பூமிப்பந்து எங்கள் கூடைப் பந்து..அந்த வானம் வந்து குடை

தந்ததின்று..சிறையிருக்கும் மனங்களை பறவை செய்..கரையிருக்கும்

நிலவினை சலவை செய்..இந்த உலகத்தில் விழாமல் எவருமில்லை..

* அவர் மேல் எனக்கு விமர்ச்சனங்கள் உண்டு. குறிப்பாக அவருடைய பாத்திர படைப்புகளின் பின்னனியை பற்றிய ஒரு குறைந்த அளவுக்கூட விபரக்குறிப்புகள் இருக்காது மற்றும் படங்களின் உச்சகட்ட காட்சியில் (climax) எப்போதும் ஒரு குழப்பத்துடனே முடிப்பதாகத்தோன்றும்.

எனினும் எனக்குப் பிடித்த முக்கிய திரைப்படக் கலைஞர்களில் திரு.ஜீவாவும் ஒருவர்.

2 கருத்துகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

நல்ல பகிர்வு சிவா...
இயக்குனர் ஜீவாவை விட எனக்கு ஒளிப்பதிவாளர் ஜீவாவை ரொம்ப பிடிக்கும்.
அவர் படங்களில் எனக்கு பிடித்தது "உள்ளம் கேட்குமே"...

சு.சிவக்குமார். சொன்னது…

பின்னூட்டத்திற்கு நன்றி திரு.