இங்கிருந்து சுமார் அரைமணி நேர பயணத்தில் (டவுன் பஸ்ஸில்) அமைந்திருக்கும் ஊர் ஒட்டபிடாரம்.தமிழக அரசின் 5ம் வகுப்பு பாடத்திட்டத்தை (90-களில்) பயின்ற யாராலும் மறக்க முடியாத ஊர் ஒட்டபிடாரம்.
ஆம்! கப்பல் ஓட்டிய தமிழன்,செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊர். ”வந்தால் கப்பலோடு வருவேன்; இல்லையேல் கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று சொல்லி அயல்நாடு சென்று பொருள் திரட்டி இந்தியர்களுக்கென்று முதன் முறையாக(!) வாணிபக் கப்பல் வாங்கி வந்தவர்.
இந்த ஊரிலிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில்தான் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய கோட்டை அமைந்துள்ளது. வெள்ளையர்களின் தாக்குதலினால் சிதைந்து கிடந்த இந்த இடத்தில், 1971ம் ஆண்டு திரு.கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.அதில் திரு.வீரபாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன முழு உருவச்சிலையும், அவரைப்பற்றிய தகவல்களையும் ஒவியங்களாக வரைந்து வைத்துள்ளனர்.
மேலே உள்ள படங்களில் உள்ள திரு.வீர பாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன இந்த சிலையின் எடை 6டண்.சிலையைச் சுற்றியுள்ள மண்டபத்தின் நான்கு தூண்களும் ஒரே கல்லால் ( தனிதனியாக) ஆனவையாகும்.இதன் எடை முறையே 1டண்.
ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் இந்தப் பகுதிக்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு குழுவினர் அப்போது அங்கு பொது மக்களுக்கும், அரசிற்கும் பெரும் பிரச்சனையாக இருந்த வழிப்பறிகொள்ளையர்களை பிடித்து அரசிடம் ஒப்படைக்கின்றனர்.
அவர்களுடைய வீரச்செயலைப் பாராட்டிய அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை பரிசாக வழங்குகிறது.அந்த நிலப்பகுதியை ஆட்சிசெய்து வரும் இவர்கள் ஒரு முறை வேட்டைக்குச்செல்கின்றனர். அப்போது இவர்களுடைய வேட்டை நாய் ஒரு முயலைத் துரத்த,நாய்க்குப் பயந்து ஒடிக்கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் திடீரென்று திரும்பி அந்த நாயை எதிர்க்கிறது. இதைக் கண்டு வியந்த அவர்கள் இந்த மண்ணை மிதித்தவுடன் தான் முயலுக்கு வீரம் வந்திருக்கிறது,முயலுக்கே இவ்வளவு வீரமென்றால்!! எனவே இயற்கையிலேயே வீரம் நிறைந்த அந்த மண்ணில் தனது கோட்டையை அமைத்து அங்கிருந்தே ஆட்சி புரிவது என்ற முடிவிற்கு வருகின்றனர்.
அப்படி அமையபெற்ற கோட்டையில் நான்காவதாக ஆட்சிப்பொறுப் பேற்றவர் தான் திரு.வீரபாண்டிய கட்டபொம்மன். கிட்டத்தட்ட 96கிராமங்கள் இவருடைய ஆளுகையின் கீழிருந்ததாக சொல்லப்படுகிறது.
இங்கிருந்து சுமார் 70-80கி.மீ துரத்தில் அமையபெற்றுள்ள ஊர் திருச்செந்தூர். இங்குள்ள முருகனுடைய தளத்தில் காலைப் பூசை முடிந்த பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை துவக்குவதை வழக்கமாக கொண்ட திரு.வீ.பா.க. ,இதற்கென்று கோட்டை - திருசெந்தூருக்குக் கிடையில் நிறைய மணி மண்டபங்களை (Bell tower) அமைத்திருந்தார்.
திருச்செந்தூரில் நடக்கும் விழாவொன்றில் இவர் பங்கேற்கச் சென்றதை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், இவரில்லாத நேரம் பார்த்து இவருடைய கோட்டையைக் கைப்பற்றி அதை முற்றிலும் சிதைத்து விடுகின்றனர். தஞ்சமென்று புகுந்த இடத்தில் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு தன்னுடைய 37ம் வயதில் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலடப்படுகிறார். (வரலாற்றில் மாவீரர்கள் என வர்ணிக்கப் படுபவர்கள், பெரும்பாலும் நாற்பது வயதை தாண்டுவதில்லையோ!!!).
அந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்ட இவருடைய சகோதரரான திரு.ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி தன்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 7,000ம் பேர்களின் துணையுடன் வெறும் களிமண் சாந்து மற்றும் சில பொருட்களைக் கொண்டு மூன்றே நாட்களில் ஒரு வலிமை வாய்ந்த கோட்டையை பழைய சிதைந்த கோட்டையிருந்த இடத்த்திலேயே மீண்டும் நிர்மாணிக்கிறார். இந்தக் கோட்டையின் வலிமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை ஜிப்ரால்டர் கோட்டை என்று வர்ணிக்கிறார்கள். இந்த கோட்டையும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மீண்டும் முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது.
இந்த சிதைவில் எஞ்சிய திரு.வீரபாண்டினுடைய குலத்தெய்வ கோவில் மட்டும் கோட்டையின் சில பகுதிகளைக் கொண்டுதான்,சுமார் 36ஏக்கர் பரப்பளவிற்கு தற்போதுள்ள நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள தகவல்களைக் கூறுவதற்கென்றே அரசால் நியமிக்கப்பட்ட நபர் ஒருவர் இங்குள்ளார்.
இவ்வளவு ஆண்டுகளாகியும் கூட இந்த ஊரின் வளர்ச்சியளவு ஒன்றும் பெரிய அளவில் இல்லையென்றே தோன்றுகிறது. இப்போது இந்த கோட்டையுள்ள இடத்தில் சுமார் 500குடும்பங்களே வசிப்பதாகத் தகவல். இந்த இடத்திற்கான பேருந்து வசதியும், சாலை வசதியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. பொதுவாக வரலாற்றின் புகழ் நம் வாய்களிலும், ஏடுகளிலும் மட்டுமே.
கொஞ்சம் சிரத்தையெடுத்தால் இந்த இடத்தை ஒரு வரலாற்று பாரம்பரியமான சுற்றுத்தளமாக மாற்றலாம். இவ்விடத்தை எல்லோரும் அறிவதற்கேற்றவகையில் இதனுடன் (வரலாற்றுடன்) சம்மந்தமுள்ள ஏதாவது ஒரு துறையை இங்கு நிறுவலாம்.
சம்மந்தமில்லாமல் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.
டால்ஸ்டாயின் எழுதுகோல் இங்குண்டு
ஆனால் அது எழுதிய அன்பு இங்கில்லை..
காந்தியின் கண்ணாடியும்,காலனியும் இங்குண்டு..
ஆனால் அது பார்த்த ஆழங்களோ,கடந்த தொலைவுகளோ
இங்கில்லை.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக