சனி, 29 மே, 2010

மறக்க முடியாத சில குரல்கள்...

நாம் பெரிதாக பெரிதாக நம்முடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்குதோன்னு தோனுது.

நாலா வகுப்பும் அஞ்சா வகுப்பு படிக்கிறப்ப நம்மையாராவது நீ பெரிசான என்ன ஆவன்னு கேட்பாங்க...

உடனே நாமளும் டாக்டர்,இன்ஞினியர் அப்படீன்னு சொல்வோம்..

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும் வக்கீல்,கலைக்டர் இல்லைன்னா ஸ்போர்ட்ஸ் மேன் அப்படீன்னு சொல்வோம்...

அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரிசானுதும் கரெக்டா சில படிப்புகளின் பெயரைச்சொல்லி IPS,IAS,IFS,MBA,IT,MA,Msc,P.HD..இப்படீன்னு சொல்லுவோம்..

இதில் எத்தனை பேர் தான் நினைத்தைச் சாதித்திருக்கிறார்கள் என்பது எண்ணிக்கையில் அடங்கிவிடும்.

எதாவது ஒரு சூழலியியல் காரணங்களுக்காக தங்கள் கனவை பலிகொடுத்தவர்கள் அனேகம் பேர்.

வாழ்கையில் இவர்கள் இருவர் சந்திக்கும் புள்ளியில் நிச்சயம் ஒருவர் மற்றவரின் முடிவே புத்திசாலித்தான முடிவு என்று கூறுவதும் உண்டு.

கல்லுரியில் ஆசிரியர் கேட்கும்போது விளையாட்டாக ” நாங்க என்னாவோம்னு எங்களுக்கே தெரியாது” என்று கூறுவதுமுண்டு.  அது உண்மையும் கூட.  வாழ்க்கை ஆதாரத்திற்காக பிடிக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டியுள்ளது.அவ்வளவே..

நமக்கான பெரும்பாலானவைகள் இந்த வேலைக்கு வெளியேதான் உள்ளது.அவற்றின் உயிரோட்டமே இந்த வேலைகளில் நம்மை நீடிக்கச்செய்கிறது....

மேலே சொன்னவைகள் எதற்கு எனில்  எல்லோருமே அவரவர்களின் பாலியத்தையும் பதின்மத்தையுமே பெரிதாகச் சொல்லுகிறார்கள். அது எவ்வளவு கசப்பெனினும்.....

ஏனெனில் வடுக்கள் ஏந்தாத உடலைப்போலனாது,அவரவர்களின் பதின்மமும் பாலியமும். வடுக்கள் விழ ஆரம்பித்துமே நமக்குள்ளான அழகியலும் மனிதமும் தொலைய ஆரம்பித்துவிடுகிறது. கணக்குகூட்டல்களும் எதிர்கால திட்டங்களுமென இல்லாத ஒரு காலத்தில் வாழ பழகுகிறோம்....

தனுஸ்கோடி தொடங்கி,குஜராத்,சுனாமி என வாழ்வின் அபத்தங்களையும்,நிலையாமையையும் இயற்கை எவ்வளவுதான் எடுத்து இயம்பினாலும் செக்கு மாட்டு வாழ்க்கையை விட முடிவதில்லை..

எனவே ஆசுவாசிக்கவும்,சிறிது தலைசாய்க்கவும் எல்லோரும் திரும்புவது பதின்மத்திற்கும்,பாலியத்திற்குமே....

பதினமத்தின் ஆழப்பதிவே ஒரு மனிதனின் முழுவாழ்க்கையுமே ஆக்கிரமிக்கிறது. எனவே பதின்ம நினைவுகள் எல்லோருக்குமே முக்கியமானதுதான்....

என் பதின்மங்களில் எங்களுரில் ஒரு விசேச பழக்கமுண்டு. மின்மினிப் பூச்சியைப் ( உங்கள் புரிதலுக்காக- வழங்கல் பெயர்-பொன்னாம்பூச்சி)  பிடித்து சாமண்டரி பாக்ஸில் வைத்துக்கொள்வோம். அந்த பாக்ஸின் உள்ளே அதற்கான உணவாக இலைகளை இட்டு நிரப்புவோம்.தினமும் அது முட்டையிடுகிறதா...எத்தனை முட்டைகள்..எப்போது குஞ்சு பொறிக்கும் என ஆவலாகப்பார்போம்.காலையில் கண் திறக்கும்போதே அந்த பாக்ஸ் கையிலிருக்கும். இரவு படுக்கப் போகும்போதே காலையைப் பற்றிய நினைப்பிலேயே படுப்போம்...

இன்றும் அது போலவே என் பதின்ம,பாலிய நினைவுகளை என் மனப்பெட்டியில் இட்டு பத்திரப்படுத்தியிருக்கிறேன்..இபோது அது முட்டைகளை ஈனுகிறது..இன்னும் சில நாட்களில் முட்டைகள் சினையாகும்,பிறகு அது பொறியும்.உள்ளிருந்து வரும் குஞ்சுகள் பறக்குமென்றே நம்புகிறேன்..

என் பதின்மத்தில் கேட்ட சில குரல்கள் என் மனக்குளத்தில் கூழாக்கற்களைப் போல இன்றளவும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

1. முதல் குரல் - ஆகாசவானி..மாநில செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயண சுவாமி. என்ன குரல்..சத்தியமாக சாகிறவரைக்கும் மறக்காது அந்தக்குரல்..இந்த குரல்தான் அடையாளம்..இந்த குரலை கேட்டதுக்கப்புறமும் படுக்கையிலே படுத்துட்டுருந்தா அடிதான் கிடைக்கும்.எனவே இந்தக் குரலைக் கேட்டவுடன் படுக்கையைவிட்டு எந்திரிச்சரனும்.

இந்தக்குரல் எங்களுக்கு ஒரு ஆதர்சம்.இந்த குரல் +  ஒரு டம்மி செய்தியறிக்கை +  ஒரு அப்பு கமல் வேசம். இந்த மூனையும் வச்சுதான் PRS ல் நடந்த NCC பயிற்சி வகுப்பு கலைநிகழ்ச்சிகளில் முதல் பரிசை நவிட்டினோம்.

டம்மி செய்தியறிக்கை இப்படித் தொடங்கும் : ஆகாசாவனி..ஆத்தா வழிக்கும் சானி..செய்திகள் வாசிப்பது அடாமூக்கன் தம்பி கொடாமூக்கன்..

2. திரு.வரதராஜனுடைய குரல் : வயலும் வாழ்வும் மற்றும் செய்திகள் இது ரெண்டுமே தடைசெய்யப்பட்டிருந்த என் காதுகளில் இவருடைய குரலைக் கேட்ட பிறகே செய்திகள் மட்டும் நுழைய அனுமதித்தேன்.

 இன்னைக்கு செய்திகள் யாரு வரதராஜனா? அப்படீன்னு சப்தத்தை வைத்தே தின்னையில் இருக்கும் பெரிசுகள் சொல்லிவிடும்.தேவையான இடத்தில் அழுத்தங்கள்,தேவையான முகபாவங்களுடன் ( இன்னைக்கு மாதிரி விமான விபத்தைப் பற்றி பேசும்போது பெப்சோடன்ட் விளம்பரம் மாதிரி சிரித்துக்கொண்டல்ல)  கொடுத்து வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

இவர் K.பாலச்சந்தரோட சீரியல்களில் கூட கொஞ்ச நாள் தலைகாட்டினார்.

இதே வகையில் செய்திகளுக்காவே என் மனதில் இடம்பிடித்தவர்கள் என்று ஷோபனா ரவி,நிஜந்தன்,பாத்திமா போன்றோர்களைக்கூறலாம்.

3. சூலூர் கணேஷ் : அப்படியே அவருடைய குரலிலேயே நம்மைத் தூக்கி தன்னோட கையில் பொத்தி வச்சுக்குவார். சனிக்கிழமை காலைகளில் 8.30க்கு கோயமுத்தூர் வானொலி நிலையத்தில் வாரம் ஒரு நாடகம் ஒலிபரப்புவார்கள். அதில் பெரும்பாலும் ஒரு குரலாக அல்லது குறைந்தளவான எண்ணிக்கையுள்ள குரல்களே இடம்பெறும்.இந்த ஒரு குரல் மற்றும் குறைந்தளவு எண்ணிகையுள்ள குரல்களில் இரண்டு மூன்று குரல்களை சூலூர் கணேசே பேசுவார். அந்த குரலில் முழு நாடகத்தையும் அவர் வாசிக்கும் விதத்தை நாள் பூராவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அதுவும் சில சமயங்களில் ஒரு சில வசனங்களுக்கிடையில் இளையராஜாவோட புல்லாங்குழலிசையை பயன்படுத்துவார்கள். மோர் சாதத்திற்கு கடிச்சுக்கிட்ட பச்சமிளகாய் மாதிரி அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அதெல்லாம் நம்ம சின்ன வயசு போட்டாவை பார்க்கிறமாதிரி அத்தனை பரவசமானது.

4. தென்கச்சி கோ.சுவாமிநாதன் : இவரைப் பற்றி நான் பெரிசா சொல்ல வேண்டியதில்லை.அனேக பேருக்கு பாட்டிமார்கள் இல்லையென்ற குறையை நீக்கியவர்.அவ்வளவு கதைகள் சொல்பவர். சிரிக்காமல் இவர் சொல்லும் கதையைக்கேட்டு நம்மால் சிரிக்காமல் இருக்கவே முடியாது.

இவருடைய குரல் பழம்பெரும் நடிகர் திரு.தங்கவேல்(பேருக்கு முன்னாடி டமால் னோ டனார் னோ வரும்) அவர்களின் குரல் போலவே இருக்கும். திரு.தங்கவேல் இறந்த சமயத்தில் அவர் நடித்த படத்தில் “டப்பிங்” வேலை மட்டும் பாக்கியிருந்தது. அப்போது திரு.தென்கச்சியை வைத்துத்தான் அதை முடித்தார்கள்.

5. திரு. நாகூர் ஹணிபா : மிக கனமான குரல் அது.அதை உச்சஸ்தாயில் செவிக்கினிமையாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே.

சில குரல்களை என்னால் பெயரளவில் அல்லாமல் பாட்டளவில் மட்டுமே நினைவில் இருத்த முடிந்தது. அவை:

தட்டுங்கள் திறக்கப்படும்;கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்குமென்றார். ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார்..எனக்குப் பொதுவாக கிறிஸ்துவ பாடல்கள் பிடிப்பதில்லை. சிறப்புக் காரணம் ஏதுமில்லை.ஆனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் பாடியவரின் குரலே. இந்தக் குரலை என்னால் very unique voice என்று மட்டுமே வர்ணிக்க இயலும்.

6.சீர்காழி சிவசிதம்பரம் : ஒரு அழுத்தமான எளிதில் கடந்து செல்ல இயலாமல் கட்டிப்போடும் குரல்.

தாமரை மலர்கள் ஆறு; அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு இந்தப் பாட்டை இவர் பாடினாரா இல்லை சீர்காழியா என்று அடிக்கடி குழப்பம் வரும்.

7. கிருபானந்த வாரியார் : இவரைப் பற்றி நான் என்ன சொல்றது.அதியெல்லாம் கேக்கிறதுக்கு கொடுத்து வெச்சிருக்கனும். சின்ன வயசில் நான் இமிடேட் பன்னிய ஒரே குரல் இவருடையதுதான். யார் வேனா ரொம்ப சுலபமா இவருடைய குரலை இமிடேட் பன்னலாம்.ஆனால் அவருடைய சொற்பொழிவுகள்,கருத்துகள்??.


8.ஷாகுல் அமீது ( ஹமீது ) : இந்த பெயரில் மொத்தம் ரெண்டுபேர்.

ஒருத்தர் சிலோன் ரேடியா மூலமா பிரபலமானவர்.எனக்கு இவர் சன் தொலைக்காட்சியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலமே அறிமுகம். எளிதில் மறக்கமுடியாத குரல்.

இன்னொருவர் அதே சன் தொலைக்காட்சியில் வரும் “சென்ற வார உலகம்” என்ற நிகழ்ச்சியில் வருபவர்.ரொம்பவும் மென்மையான குரல். பூகம்பே வந்தாலும் இவர் சொல்ற விதத்தில் அது பூமாதிரி ஆகிற அளவுக்கு மென்மையான குரல்.

9. மு.க.முத்து : இவர் பாடின ஒரு பாட்டு ”எல்லோரும் கொண்டாடுவோம்”
 என்ற பாட்டு.இந்த குரலை அடையாளம் சொன்னவர் என் தந்தை. நல்ல வளமான குரல்.இவருடைய தந்தையின் சாயலில்லாத குரல். இவர் தமிழ் நாட்டின் அரசியல் உள்ளமட்டும் மறக்க முடியாதவரின் மகன்.

 மேலே சொன்னவையல்லாம் நான் பதின்மத்தில் கேட்ட குரல்கள். இப்போது சொல்வதெனில் இன்னும் இன்னுமென்று நிறைய உள்ளது.

கருத்துகள் இல்லை: