வியாழன், 24 ஜூன், 2010

Simple but complicated...

ஒரு ஜென் துறவி தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்துவிடுகிறார்.அதுவும் நீண்ட நேரத்திற்கு.பல பேர் எல்லா விதமாகவும் கேட்டுப் பார்த்தும் அவரிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முடியவில்லை.

ஒரு நாள் மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருக்கிறார்.இந்த முறை அங்கிருந்தவர்கள் அவரை விடுவதாயில்லை. மிகவும் வற்புறுத்தி கேட்டபின் ஒருவாறு அந்தத் துறவி வாய் திறக்கிறார்.இல்லை என் கனவில் நான் தினமும் ஒரு பட்டாம்பூச்சியாக சிறகடித்து எங்கெங்கோ பறக்கிறேன் என்கிறார்.

எல்லோருக்கும் ஆச்சரியம் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? கனவுதானே! அதிலும் அழகான கனவு.

அதற்குத் துறவி முதலில் எது கனவு, நான் மனிதனாக இருந்து பட்டாம் பூச்சியாக மாறுகிறேனே அதுவா? அல்லது பட்டாம் பூச்சியாக இருந்து மனிதனாக வாழ்வதாக உணர்கிறேனே இது கனவா?


ஜென் ஒரு அற்புதமான,எளிமையான ஆண்மீக வழி. இதற்கு இப்படித்தான்,இதுதான் என்று வழிமுறையோ கோட்பாடோ கிடையாது. நீங்கள் ஜென்னைத் தழுவ நினைத்தால் உங்களுக்கு ஒரு தேநீர் விருந்து நடக்கும்.

அந்த தேநீரை நீங்கள் எவ்வாறு சுவைக்கவேண்டுமென்பதை ஜென் குரு உங்களுக்கு காட்டுவார்.அந்த தேநீரைப் பருகுவது போல வாழ்கையைத் துளி துளியாக பருகுவதே ஜென்.

ஜென் கதைகள்,கவிதைகள்,தத்துவங்கள் மிகச் சிறியது.பனித்துளிப் போல.ஆனால் அது உள்ளே பொத்தி வைத்திருக்கும் அர்த்தமோ,பனித்துளி பிரதிபலிக்கும் சூரியனைப் போல,பிரபஞ்சத்தைப் போல எதார்த்தத்தில் பிரம்மாண்டம் கொள்ளும்.

ஜென் கருத்து ஒன்று :”ஒரு ஆற்றில் ஒரு முறைதான் கால் வைக்க முடியும்”.

மேலே உள்ளக்கருத்தில் நீங்கள் ஆற்றை ஆறாக வைத்துக்கொண்டாலும் சரி,இல்லை ஆற்றுக்குப் பதிலாக காலம்,வாழ்கை என உங்கள் விரிவிற்கேற்றவாறு மாற்றிக் கொண்டாலும் சரி இந்தக் கருத்து நன்றாகப் பொருந்தும்.



குரு சீடனிடம் : இலை விழுகிறது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழுந்தது, இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் : இலை விழும், இது என்ன காலம்?

சீடன் : நிகழ் காலம்.

குரு சீடனிடம் :போதும்.நீ ஞானம் அடைந்து விட்டாய்.இனி உன் பாதையில் செல்.

ஹைக்கூ என்ற ஒரு கவிதை வடிவம் ஜென்னிலிருந்து வந்ததுதான். முற்றிலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக கொண்டது.இதன் சிறிய வடிவமே இதன் தனி சிறப்பு.

ஒரு ஜென் துறவி தன் வாழ்நாளில குறைந்த பட்சம் ஒரு ஹக்கூ படைப்பதே சாதனையாக கொள்ளப் படுகிறது.

மூன்று,நான்கு என்பது உச்சபச்ச சாதனை.பாஷோ என்ற ஜென் துறவியே அதிக ஹக்கூக்களை எழுதியவர் ஆவார்.

ஒரு பருந்துப் பார்வையில் அவதானிப்பதெனில் சிறிய,எளிய என்பதே பொதுவாக ஜப்பானிற்கு வாழ்வாக இருந்து வந்திருக்கிறது.தொட்டியில் வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் போன்சாய் கூட ஜப்பானிலிருந்து வந்ததென என கேள்வி.


ஒரு துறவி ஒரு ஹக்கூ படைத்து அது எவ்வாறு வந்திருக்கிறதென தன் குருவிடம் காட்டுகிறார்.

சில்வண்டின் இரு
சிறகுகளை நீக்கினால் அது
குங்கமச்சிமிழ்.

என்று பொருள்வரும்படி எழுதுகிறார்.ஆனால் குருவோ அந்த ஹைக்கூவை பின் வருமாறு மாற்றுகிறார்.

குங்கமச் சிமிழிற்கு இரு
சிறகுகளை வத்தால்
அது சில்வண்டு.

அதில் ஒரு பிரம்மாண்டமே புரட்டப்பட்டிருக்கிறது.

உண்மையில் நாம் இப்போது வாழும் உலகம் சில்வண்டின் சிறகுகளை நீக்கிக் கொண்டிடுக்கிறது.

செவ்வாய், 22 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

மாவிலைத் தட்டி

திறந்த கதவிடுக்கில்

ஆருயிர் நண்பனாய்

ஆரத்தழுவி நுழைந்த காற்று

இருக்கை,தொலைக்காட்சி,மேசை,

உள் அறை,அடுப்படியென அலைந்து

நிலைத்தது

கவிதைக் குறிப்புகளின்

பக்கங்கள் புரட்டி...

நிமிடங்களில் ஆசுவாசிக்கலாமென

அமருந்தருணம்,அறையெங்கும் நிறைந்தது

புழுக்கம்..

நண்பர்களின் வழியறியுமோ காற்றும்...

*******************************************************

கேள்விக்குறியென

மூப்பில் வளைந்து

கையில் பற்றிய கழியில்

இடறும் ஆச்சரியக்குறி

நெடுக்கச் செல்லும் சாலையை

குறுக்காக கடந்ததை பார்த்தன்

சாட்சியாய் மூவர்...

நான்..அந்த தவிட்டு  நிறக்குருவி

நீங்கள்...

மீள்....

படிச்சி ரொம்ப நாள் ஆன இலக்கியத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக சில பேர் மறுபடியும் ஒரு முறை வாசிப்பதுண்டு. இதை மீள் வாசிப்பு அப்படீன்னு சொல்வாங்க..இதுவே பதிவுலகில் பரவலாக மீள்பதிவு அப்படீன்னு போட்டுவிடுவார்கள். ஆனா பொதுவா என்னோட அபிப்ராயம் மீள் பதிவு போன்றதல்ல மீள் வாசிப்பும், பார்வையும்.

மீள் வாசிப்பும், பார்வையும் ஏற்கனவே படித்த,பார்த்த ஒரு படைப்பை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு புதிதாக  ஏற்ப்பட்ட அனுபவங்கள், கிடைத்த தகவல்கள், படிப்பினைகள், புரிதல்கள்,  வரித்துக்கொண்ட புதிய் கருத்துகள் இவைகளைக் கொண்டு வாசிக்கும் நிலையில் அந்த படைப்பானது ஒன்று நம்மை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச்செல்லலாம், முன்பிருந்தை விட சற்று பின் நகரலாம், புரிதலில் ஏதாவது நடக்கலாம் அல்லது இவையெதுவுமே இல்லாமல் இருக்கலாம்.

ஆக மீள் வாசிப்பு என்பது மருத்துவ துறையில் இப்போது பரவலாக கூறப்படும் முழு உடல் பரிசோதனை எனபது போல நம் நம்பிக்கைகள், தத்துவங்கள், புரிதல்கள் ஆகியவற்றை கொண்டு அந்தப் படைப்பை  மறு பரிசோதனை செய்வது ஆகும்.

நிற்க...மேலே சொல்லவர்ரது வச்சிட்டு நான் ஏதோ  படத்தை விமர்ச்சனம் செய்யப் போறிங்கன்னு நினைச்சா சோ சாரி...

எப்பவோ சரியாக கவனிக்காமல்,கவனத்திற்கு வராமல் போன சில பாடல்களை இப்போது கேட்கையில் ரொம்ப நாள் கழிச்சு வானவில்லை பார்த்த மாதிரி இருக்கிறது.

அதைப் பற்றிய பகிர்வே இது...

1. புத்தும் புது காலை...பொன்னிற வேளை....என் வாழ்விலே...

ஆபிஸ் வேலையா ஒரு சமயம் காரில் போனபோது கேட்ட பாடல்.இசை கண்டிப்பா மேஸ்ட்ரோவாகத்தானிருக்கும். ஒரு காலை நேரத்தில்தான் இந்த பாடல் கேட்டேன்.அன்றைய நாளே அற்புதமாக இருந்தது. unforgettable song...

2. சிறு சிறு மழைத்துளி மனதுக்குள் விழுகிறதே...

படம் : அரசாட்சி,அர்ஜீன் நடிச்சது.இந்தப படத்தில் ரெண்டு பாட்டு நல்லாருயிருந்தது. ஒன்னு மேல சொன்ன பாட்டும்.இன்னொன்னு “ நான் இருபது வயது ஆர்வக்கோளாறு..என்னை ஆசைப்படாதவன் பார்வைக்கோளாறு...

சிறு சிறு மழைத்துளி எனக்கு ஒரளவு பிடித்த பாடல்தான் எனினும் ரொம்ப நாள் இடைவெளிவிட்டு ,ஒரு தொலைதூர பேருந்து பயணத்தில் தூக்கத்-திலிருந்து கொஞ்சமா முளிப்பு வந்த போது, வெளியிலிருந்து ஜில்லுனு சாரல காத்து. எல்லோரும் நல்லா ஆழ்ந்து தூங்கிட்டு இருக்காங்க..பஸ் அப்படியே ஒரு ரிதத்தில் போய்ட்டு இருக்கு. அப்ப இந்த பாட்டை கேட்க நேர்ந்தது. யப்பா..எல்லாத்துக்குமே ஒரு குறிப்பட்ட தருணம்,மனநிலை இருந்தா ரசிக்கமுடியாததுன்னு எதுவேமேயில்லை.


3. அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே....புதுப்பாடல் நீ பாடவா...

இது அனுபவிக்க வேண்டிய பாட்டு...ஆராயக்கூடாது..பாட்டுல ஒரு வரி வரும் ”இசை தேவன் இசையில் ” அப்படீன்னு...நிச்சயமா பாடல் அவருடையதாகத்தானிருக்கும்.

4. மல்லிகையே..மல்லிகையே தூதாகப் போ..கொஞ்சிவரும் தென்றலையே நீ சேர்த்துப் போ....

படம் : கும்பக்கரை தங்கைய்யா என்று நினைக்கிறேன்...அப்படியே வார்த்தைகளை வருடித்தருவது போன்ற இசை....

5. சிரிப்பினில் உன் சிரிப்பினில்..மனதின் பாதியும் போக...

படம் : ப.கி.மு.சரம். இசை : ஹேரிஷ் ஜெயராஜ். இந்த படம் வந்ததிலிருந்து இந்தப் படத்தில் இந்த பாட்டுதான் என்னோட பேவரிட். கேக்கும்போதெல்லாம் மனம் அப்படியே பஞ்சுமாதிரி  லேசாயிரும். அதுவும் ஆண்குரலில் பாடல் துவங்கும்போது காதுக்குள்ள பாடறமாதிரி அவ்வளவு மெனமையாக இருக்கும். “முதல் நாளில் பார்த்த வனப்பு இன்னும் குறையவில்லை உனக்கு.” போன்ற வரிகள்  பாடலில் நம்மை லயிக்கச்செய்துவிடும்..

6. மான் கண்டேன்..மான் கண்டேன் மானே தான் நான் கண்டே...

பாடியவர் ஜேசுதாஸ் என்பதைத் தவிர வேறொன்றும் அறியேன். ஆனால் அடிக்கடி என்னையுமறியாமல், இந்த பாடலை திடீரென்று வாய் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுகிறது.


7. ஓம் முருகா ஓம் முருகா உனக்கு நன்றி சொல்வேன்...

ஸ்ரீகாந்தின் இந்தப்பாட்டின் படமும்,இசையும் ஞாபகத்தில் இல்லை.பாஸ்ட் பீட்.சரணத்தில் சாதரணமா இருக்கற, பாட்டு பல்லவி தொடங்கியவுடன் புளுங்கற வீட்டுல ஜன்னலை திறந்து விட்ட மாதிரியிருக்கும்.

8. வான் நிலா..இமைத்தது....

காதல் வைரஸ் படத்தில் இடம்பெற்றப் பாடல்.கதிரை இதயம் காரணமாக மிகுந்த அளவில் நேசிக்க ஆரம்பித்திருந்தேன்.ஆனால் ஒவ்வொரு படமும் வெளி வர வர என்னை விட்டு விலகிக் கொண்டேயிருந்தார். இதயத்திற்கு பிறகு  உழவன் மட்டுமே நெஞ்சில் நிறைந்தது. எனினும் அவர் படத்தின் பாடல்கள் ஏமாற்றியதில்லை. இந்தப் பாடல் முதலில் கேட்டைதை விட  இப்போது கேட்கும்போது நன்றாக இருக்கிறது.சற்று சிரமமான பாடலும் கூட.பாடிய தொனி என்னை மிகவும் கவர்கிறது. பாடல் வரிகளும் அருமை.

இந்தப் படத்தில் இன்னொரு நல்ல பாடல் “ என்ன ஆச்சு உனக்கு..புதுசா இந்த பார்வை எதற்கு.” ஆனா என்னா இப்ப இருக்கற டிரெண்டுக்கு பசங்க இந்தப் பாட்டை பாடினாத்தான் பொருத்தமா இருக்கும்.

நேரமின்மை காரணமாக என்னால் இன்று இவ்வளவே பகிர முடிந்தது.மீதி அடுத்த பதிவுகளில்..

வெள்ளி, 11 ஜூன், 2010

ஞாபகவெளியில்...

”மதியெனும் மனிதனின் மரணம் குறித்து” - ஆசிரியர் இரா.நடராசன்(பெயரில் சிறிது ஐயமுண்டு).

சிறுகதை தொகுப்பு.

சில படங்களும்,புத்தகங்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளென்பது ஆறிய காயங்களின் தழும்பை போன்றது. என்ன செய்தாலும் சில தழும்புகள் மறையவே மறையாது.

அந்த தழும்புகளை பார்க்கும் பொழுதும்,தடவும் பொழுதும் மனசில் மெல்ல காயம்,வலி என நினைவுகள் பூக்கத்தொடங்கும்.அது ஒரு சுகம்.

(வலி என்றவுடன் எனக்கு திரு.ஜெயமோகனும், சாருவும் நினைவுக்கு வருகிறார்கள்.2008 அக்டோபர் மாதம். நீண்ட காலத்திற்கு பிறகு குற்றாலம் பதிவுகள் சந்திப்பிற்க்கான அழைப்பிதல் உயிர்மையில் வந்திருந்தது.


முக்கிய எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பில் திரு.ஜெயமோகன் அவர்களைக் கருத்தில் கொண்டு நானும் அச்சந்திப்பிற்கு சென்றேன்.இரண்டு நாட்கள் நடக்கும் சந்திப்பில் முதல் நாள் உணவு இடைவேளையின் போது திரு.ஜெ.மோ. விடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு, அப்போதைய அளவில் நான் படித்திருந்த கன்னியாகுமரி( நாவல்) ,ஆயிரம்கால் மண்டபம்( சிறுகதைத்தொகுதி) பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது சாருவிடமிருந்து,ஜெ.மோ.க்கு ஒரு குறுஞ்செய்தி.


தனக்கு ”பைபாஸ் சர்ஜரி” முடிந்து மருத்துவமனையில் இருப்பதால் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும், வலி அதிகமாக இருக்கிறதெனவும்.


பதிலுக்கு ஜெ.மோ. வலியைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அது கூட ஆண்மீகம் தான்.


இதைப் பற்றி சாரு பிறகொரு பதிவில் எழுதினார். ஜெ.மோக்கு வலி கூட ஆண்மீகம். எனக்கு ஆண்மீகமே வலி என்று.)

படித்து பல ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தொகுதியில் உள்ள சில சிறுகதைகள் இன்றளவிலும் என்னை மனதளவில் இம்சித்து வருகிறது.அதைப் பற்றிய பகிர்வே இது.

முதல் கதையின் பெயரே இந்த புத்தகத்தின் தலைப்பாகும்.

1.மதியெனும் மனிதனின் மரணம் குறித்து :

இது திருநங்கையாக வாழ்ந்த மனிதன் எதிர்கொண்ட பிரச்சனைகள் எப்படி அவரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது என்பது பற்றிய கதையாகும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் பாணியில் எழுதப்பட்டிருக்கும் உத்திதான் இந்த கதையின் பெரிய பலம். ஒரு சாதாரண விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்வது போன்றளவில் தொடங்கும் கதையை படித்த முடித்தவுடன் ,குற்றணர்விற்கு ஆட்படாமல் இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இதயப் பகுதியை ஸ்கேனிங் செய்துகொள்வது உத்தமம். 

சக மனிதனை அவனுடைய அனைத்துப் பலவீனங்களையும் தாண்டி நேசித்தலே உண்மையான மனிதமும்,ஆண்மீகமும் ஆகும். இந்தக் கதையின் சாரம் இதுவென்றே நினைக்கிறேன்.

2. இரத்தத்தின் வண்ணத்தில் :

சூழ்நிலைக்காரணிகளால் விலைமாதாக வாழ நேர்ந்த பெண்,தன் தாய்க்கு எழுதும் கடிதமே இந்தக் கதை.

இதில் உண்மைச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பேர் என்று கூறி,  ஒரு கல்லூரி விடுதிக்கு வரவழைக்-கப்பட்ட விலைமாதுவை சுமார் 30பேர் சேர்ந்து கொடுமைப்படுத்திய நிகழ்வொன்று மிகுந்த அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடியவர் இந்த ஆசிரியர். அந்த பெண்ணின் வலியை ஒரு ஆண் கூட உணரக்கூடிய அளவில் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார்.

கல்கி படத்தில் ஒரு பாடல் வரும் “ எழுதுகிறேன் ஒரு கடிதம்” என்று.அந்த பாட்டை கேக்கும்போதிலெல்லாம் எனக்கு இந்த கதையே உடனடியாக ஞாபகத்திற்கு வரும்.


3. ஆயிஷா

இந்த தொகுப்பில் வரும் மற்றுமொரு முக்கியமான கதை. இந்தக் கதை குறும்படமாக எடுக்கப்பட்டு,பல பள்ளிகளில் ஒலிபரப்பப்பட்டு பரவலாக எல்லோருடைய கவனத்தையும் ,பாராட்டையும் பெற்றப்படம்.

நான் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்களிடம் இந்த வழக்கமிருக்கிறது. வகுப்பில் நன்றாக படிக்கும் பிள்ளையிடத்தே மட்டும் அதிக கவனம் காட்டுவது, அவர்களுக்கென்று குறிப்பிட்ட சில சலுகைகளை அளிப்பது,அவர்களை அவர்களறியாமலே மற்ற படிக்காத பிள்ளைகளிடமிருந்து அப்புறப்படுத்துவது என்று. அதே மாதிரி சில குழந்தைகளிடத்தில் இயல்பாய் மிளிரும் புத்திச்சாலித்தனங்களை அலட்சியப்படுத்துவது,அது பற்றி கேலி செய்வதென..

அப்படி புறகணிப்புக்குள்ளாகும் ஒரு புத்திசாலிப்பிள்ளையின் பரிதாப சாவைப் பற்றியது இந்தக் கதை.

4. விளையாட்டின் அகதிகள் :

அம்மை,காலரா போன்ற வியாதிகளை விட அதிகமாக தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட  பரவியிருக்கும் கிரிக்கெட்டினால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் கதை. ஒரு உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு கிடைக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவில் விளையாடும் மற்றத்துறையைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை.அந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒரு மாறுபட்ட அனுகுமுறையில் சொல்லியிருக்கும் கதை.

5. தலைப்பு ஞாபகத்தில் இல்லை:

 ஒரு நரிக்குறவனும்,அவன் சமூகமும் சந்திக்கும் வாழ்க்கை பிரச்சனைகள் பற்றி அந்த  நரிக்குறவனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் போல எழுதப்பட்டிருக்கும்.

இவர்கள் மேல் எனக்கும் எப்போதும் ஒரு வியப்பு உண்டு.


1. நாடோடி வாழ்க்கை முறை.


2.இன்னும் நவீன யுகத்திற்கு அவ்வளவாக தங்களை ஒப்புக்கொடுக்காதது.


3.வியாதியென்று  மருத்துவமனை வாசல்களில் இவர்கள் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை
 
4.மரணத்தை இவர்கள் எதிர்கொள்ளும் விதம். இவர்களின் சமூகத்தில் நேர்ந்த ஒரு இறப்பைக்கூட இதுவரை நான் கண்டதில்லை.

5. அவர்களுடைய குழந்தை வளர்ப்புமுறை.
6. குழந்தைகள் தூங்கும் போது ஏதாவது இரும்போ (அ) துடைப்பக்குச்சியையோ தொட்டிலின் அடியில் போட்டுவைப்பது நம்முடைய வழக்கம்.குழந்தைகளை காத்து,கருப்பு எதுவும் அண்டக்கூடாது என்பதற்காக.ஆனால் இவர்களின் குழந்தைகள் புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி  ஆட்டுவதற்கு கூட ஆளின்றி காற்றிலும்,புழுதியிலும் தனியாக கிடக்கும்.

இந்தத் தொகுப்பில் இந்தக் கதை மட்டுமே ஒரு நகைச்சுவை யோட்டத்திலிருக்கும்.

மேற்கூறிய தொகுப்பில், என் ஞாபக வெளியில் உலவிக்கொண்டிருக்கும் கதைகளைப் பற்றியே பேசியுள்ளேன். மேலும் சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.அவை மறதியெனும் பாசியில் வழுக்கி விழுந்து விட்டது.

நூலகப்புத்தகம்,படித்தும் பல ஆண்டுகளாகிவிட்டது. மேலும் புத்தகத்தை வாசிக்கையில் இது போல பதிவெழுதுவேன் என்று நான் கருதியிருக்கவில்லை. எனவே புத்தகத்தைப் பற்றி மேலதிகத் தகவல்கள் தர இயலவில்லை. இருப்பினும் சற்று முயற்ச்சித்தால் கோவை விஜயா பதிப்பகத்தில்  கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


--------------------------------------------------------------------------------------

திரு.சேஷய்யா ரவி இவரைப் பற்றி எவ்வளவு பேருக்கும் தெரியும் என்று தெரியவில்லை. இவர்  சன் தொலைக்காட்சியில் சன் செய்திக்களுக்காக --------லிருந்து சேஷய்யா ரவி என்று எதாவது ஒரு ஊரின் பெயரையோ,இடத்தின் பெயரையோ கோடிட்ட இடத்தில் நிரப்பி சொல்லுவார். இப்போதும் அதில்தான் பணிபுரிகிறாரா என்று தெரியவில்லை.

விசயம் இதுதான்.இவர் எழுதிய ஒரு சிறு கதை தொகுதியையும், கவிதைத் தொகுதியையும் வாசித்திருக்கிறேன்.  தலைப்பு ஞாபகத்தில் இல்லை.

கவிதைகள் அவ்வளவாக என்னை கவரவில்லை.ஆனால் சிறுகதைகள் நன்றாகவேயிருந்தது. அதிலும் குறிப்பாக சுபாவம் என்றொரு சிறுகதை.

மழை நாட்களில் வாய்க்கால் உடைப்பு ஏற்ப்பட்டு ஊருக்குள் புகுந்துகொள்ளும் தண்ணீரோடு சில மீன்களும் வரும். அதை பிடிக்க சிறு வயது பையன்கள் முதல் பெரியவர்கள் வரையென்று, அந்த ஊரில் போட்டி நிலவும். ஒரு பெரிய மீனை பிடிக்க கதையில் வரும்  சிறுவன் முயல அது அவன் பிடிக்குள் சிக்காமல் தப்பி, அவன் நினைவுகளில் நீந்திவந்து பயமுறுத்தும். தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போகும் நிலையிலிருக்கும்போது, எப்படியோ அந்த மீன் இவன் கையில் கிடைக்கும்.அதை தரையில் அடித்துக்கொல்வான் சிறுவன். அவனுடைய மனம் சார்ந்து விரியும் இந்தக் கதையை அழகான,கச்சிதமான நடையில் எழுதியிருப்பார்.

அதே போல இவருடைய குடி பற்றிய வர்ணனை இந்தக் கதைகளில் நிறைய இடத்தில் இடம்பெறும். மதுவின் ஒரு மிடறு உள்ளிரங்கும்போது ஒரு சிறிய எரிமலை உருண்டை தொண்டையிலிருந்து வயிற்றுக்குச் செல்வதை விவரிக்கும் பகுதி சிறப்பாக இருக்கும். இவருடைய புத்தகத்தைப் படித்த பிறகு,இவரைப் பார்க்க நினைத்தேன்.ஆனால் இவர் பற்றிய ஒரு தகவலுமே கிடைக்கவில்லை இன்றுவரையிலும் கூட...

செவ்வாய், 8 ஜூன், 2010

முதற்குறிப்பேட்டிலிருந்து....

கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...

--------------------------------------------------------------

உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்..

-------------------------------------------------------------

பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்...

--------------------------------------------------------------------

my days got colors by your dresses...
my pages got fragrance by your pedals...

---------------------------------------------------------------------

மருமகன் வழி மான்மியம்???

சமீபத்தில்,அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிபவரின் திருமணத்தை ஒட்டி தூத்துக்குடி செல்ல நேர்ந்தது. .

திருமணம் 24ம் தேதி,திங்கட்கிழமை. எனவே ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாக கழிக்கும் எண்ணத்தில் சனி இரவன்றே கிழம்பியாகிவிட்டது.

திருப்பூரில் வாரக்கடைசியிலும்,முக்கியமான  மூகூர்த்த தினங்கள் தமிழ்பண்டிகை தினங்களில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென்காசி போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு பேருந்து பிடிப்பதில் உள்ள சிரமத்தை தனி பதிவாகவே எழுதலாம்.

பெயர்பலகையில்லாமல் வரும் பேருந்தில் கூட இடம்பிடிக்க அடிதடியாகயிருக்கும்.வண்டி கிளம்பும்போது மட்டுமே அந்த பேருந்து எந்த ஊருக்குச் செல்லும் என்று தெரியும்.

 டிப்போவைத் தாண்டியதுமே பயணிகள் நிரம்புவது மதுரைப் பேருந்தில் மட்டும்தான்!

ஒருவழியாக பேருந்தில் இடம்பிடித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் கால்வைத்தேன்.

காலை 5மணிக்குகூட தூத்துக்குடியின் வெப்பத்தை நன்றாகவே உணரமுடிந்தது.

காலை- திருச்செந்தூர்

மதியம் - ஒட்டப்பிடாரம்

இரவு      -  மணமகன் இல்லம்.

மேலே சொன்ன(கா,ம)நிகழ்ச்சி நிரல்களும் இனிதே கழிந்து, இரவு நிகழ்ச்சி நிரலான மணமகன் இல்லம் சேர்ந்தோம்.

பிரம்மச்சாரியின் கடைசித் தின உற்சாகம் கொப்பளிக்க ஒரு வித நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் மணமகன் வரவேற்றார்.

வழக்கமான வரவேற்பிற்கு பிறகு மணமகனுடன் அவர்களுடைய திருமணச்சடங்குகள் பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

 நான் கேள்விப்பட்ட திருமணவழக்கத்திலிருந்து இவருடையது சற்று மாறுபட்டது. பொதுவாக பெண்ணெடுக்கும் முறைதான் - அதாவது மணமான பிறகு பெண் தன் பெற்றோரைப் பிரிந்து கணவனுடன் அவனுடைய இல்லத்திற்கு செல்லவேண்டும்.அதன் பிறகு அவள் முழுவதுமாக கணவனுடைய உறவிற்கும்,உறவுகளுக்கும் மட்டுமே பாத்திரமானவள். குழந்தை பேற்றிற்கும்( நகரமாகயிருந்தால்) ஏதாதவது வைபவங்களுக்கும் மட்டுமே தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல முடியும்.

ஆனால் மேற்சொன்ன நபரின் திருமணத்தில், இது அப்படியே தலை கீழ்.
இங்கு மாப்பிள்ளை எடுக்கும் வழக்கத்திலுள்ளது. திருமணத்திற்கு பிறகு மணமகன் தன்னுடைய மனைவியின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ஒன்று இவர் தன் மனைவியின் பெற்றோருடனோ (அ) அவர்களால் வழங்கப்படும் வீட்டிலோ தான் வசிக்க வேண்டும். ஏதாவது வைபவங்களுக்கு மட்டுமே தன் பிறந்தகம் செல்ல இயலும். இதுவே இவர்களின் சமூக வழக்கமாம்!!!.

சனி, 5 ஜூன், 2010

Pearl Harbour.

Pearl harbour - ஆங்கிலப் படத்தைப் பற்றிய பதிவல்ல இது. இந்த பெயருக்கு முற்றிலும் தகுதியான துறைமுகம் தூத்துக்குடி.ஏனெனில் இங்கு அரசர்களின் காலம் முதற்கொண்டே முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவின் முத்துக்குளிக்கும் துறைமுகம் தூக்குடியே.

இங்கிருந்து சுமார் அரைமணி நேர பயணத்தில் (டவுன் பஸ்ஸில்)  அமைந்திருக்கும் ஊர் ஒட்டபிடாரம்.தமிழக அரசின் 5ம் வகுப்பு பாடத்திட்டத்தை (90-களில்) பயின்ற யாராலும் மறக்க முடியாத ஊர் ஒட்டபிடாரம்.

ஆம்! கப்பல் ஓட்டிய தமிழன்,செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊர். ”வந்தால் கப்பலோடு வருவேன்; இல்லையேல் கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று சொல்லி அயல்நாடு சென்று பொருள் திரட்டி இந்தியர்களுக்கென்று முதன் முறையாக(!) வாணிபக் கப்பல் வாங்கி  வந்தவர்.

இந்த ஊரிலிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில்தான் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுடைய கோட்டை அமைந்துள்ளது. வெள்ளையர்களின் தாக்குதலினால் சிதைந்து கிடந்த இந்த இடத்தில், 1971ம் ஆண்டு திரு.கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.அதில் திரு.வீரபாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன முழு உருவச்சிலையும், அவரைப்பற்றிய தகவல்களையும் ஒவியங்களாக வரைந்து வைத்துள்ளனர்.


மேலே உள்ள படங்களில் உள்ள திரு.வீர பாண்டிய கட்டபொம்மனுடைய ஒரே கல்லால் ஆன இந்த சிலையின் எடை 6டண்.சிலையைச் சுற்றியுள்ள மண்டபத்தின் நான்கு தூண்களும் ஒரே கல்லால் ( தனிதனியாக) ஆனவையாகும்.இதன் எடை முறையே 1டண்.

ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் இந்தப் பகுதிக்கு பிழைப்புத்தேடி வந்த ஒரு குழுவினர் அப்போது அங்கு பொது மக்களுக்கும், அரசிற்கும் பெரும் பிரச்சனையாக இருந்த வழிப்பறிகொள்ளையர்களை பிடித்து அரசிடம் ஒப்படைக்கின்றனர்.

அவர்களுடைய வீரச்செயலைப் பாராட்டிய அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை பரிசாக வழங்குகிறது.அந்த நிலப்பகுதியை ஆட்சிசெய்து வரும் இவர்கள் ஒரு முறை வேட்டைக்குச்செல்கின்றனர். அப்போது இவர்களுடைய வேட்டை நாய் ஒரு முயலைத் துரத்த,நாய்க்குப் பயந்து ஒடிக்கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் திடீரென்று திரும்பி அந்த நாயை எதிர்க்கிறது. இதைக் கண்டு வியந்த அவர்கள் இந்த மண்ணை மிதித்தவுடன் தான் முயலுக்கு வீரம் வந்திருக்கிறது,முயலுக்கே இவ்வளவு வீரமென்றால்!! எனவே இயற்கையிலேயே வீரம் நிறைந்த அந்த மண்ணில் தனது கோட்டையை அமைத்து அங்கிருந்தே ஆட்சி புரிவது என்ற முடிவிற்கு வருகின்றனர்.

அப்படி அமையபெற்ற கோட்டையில் நான்காவதாக ஆட்சிப்பொறுப் பேற்றவர் தான் திரு.வீரபாண்டிய கட்டபொம்மன். கிட்டத்தட்ட 96கிராமங்கள் இவருடைய ஆளுகையின் கீழிருந்ததாக சொல்லப்படுகிறது.
இங்கிருந்து சுமார் 70-80கி.மீ துரத்தில் அமையபெற்றுள்ள ஊர் திருச்செந்தூர். இங்குள்ள முருகனுடைய தளத்தில் காலைப் பூசை முடிந்த பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை துவக்குவதை வழக்கமாக கொண்ட திரு.வீ.பா.க. ,இதற்கென்று கோட்டை - திருசெந்தூருக்குக் கிடையில் நிறைய மணி மண்டபங்களை (Bell tower) அமைத்திருந்தார்.

திருச்செந்தூரில் நடக்கும் விழாவொன்றில் இவர் பங்கேற்கச் சென்றதை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், இவரில்லாத நேரம் பார்த்து இவருடைய கோட்டையைக் கைப்பற்றி அதை முற்றிலும் சிதைத்து விடுகின்றனர். தஞ்சமென்று புகுந்த இடத்தில்  எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு தன்னுடைய 37ம் வயதில் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலடப்படுகிறார். (வரலாற்றில்  மாவீரர்கள் என வர்ணிக்கப் படுபவர்கள், பெரும்பாலும் நாற்பது வயதை தாண்டுவதில்லையோ!!!).

அந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்ட இவருடைய சகோதரரான திரு.ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி தன்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 7,000ம் பேர்களின் துணையுடன் வெறும் களிமண் சாந்து மற்றும்  சில பொருட்களைக் கொண்டு மூன்றே  நாட்களில் ஒரு வலிமை வாய்ந்த கோட்டையை பழைய சிதைந்த கோட்டையிருந்த இடத்த்திலேயே மீண்டும் நிர்மாணிக்கிறார். இந்தக் கோட்டையின் வலிமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் இதை ஜிப்ரால்டர் கோட்டை என்று வர்ணிக்கிறார்கள். இந்த கோட்டையும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மீண்டும் முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது.

இந்த சிதைவில் எஞ்சிய திரு.வீரபாண்டினுடைய குலத்தெய்வ கோவில் மட்டும் கோட்டையின் சில பகுதிகளைக் கொண்டுதான்,சுமார் 36ஏக்கர் பரப்பளவிற்கு தற்போதுள்ள நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள தகவல்களைக் கூறுவதற்கென்றே அரசால் நியமிக்கப்பட்ட நபர் ஒருவர் இங்குள்ளார்.

இவ்வளவு ஆண்டுகளாகியும் கூட இந்த ஊரின் வளர்ச்சியளவு ஒன்றும் பெரிய அளவில் இல்லையென்றே தோன்றுகிறது. இப்போது இந்த கோட்டையுள்ள இடத்தில் சுமார் 500குடும்பங்களே வசிப்பதாகத் தகவல். இந்த இடத்திற்கான பேருந்து வசதியும், சாலை வசதியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. பொதுவாக வரலாற்றின் புகழ் நம் வாய்களிலும், ஏடுகளிலும் மட்டுமே.

கொஞ்சம் சிரத்தையெடுத்தால் இந்த இடத்தை ஒரு வரலாற்று பாரம்பரியமான சுற்றுத்தளமாக மாற்றலாம். இவ்விடத்தை எல்லோரும் அறிவதற்கேற்றவகையில் இதனுடன் (வரலாற்றுடன்) சம்மந்தமுள்ள ஏதாவது ஒரு துறையை இங்கு நிறுவலாம்.

சம்மந்தமில்லாமல் ஏதோ ஒரு  புத்தகத்தில் படித்த கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.


டால்ஸ்டாயின் எழுதுகோல் இங்குண்டு

ஆனால் அது எழுதிய அன்பு இங்கில்லை..

காந்தியின் கண்ணாடியும்,காலனியும் இங்குண்டு..

ஆனால் அது பார்த்த ஆழங்களோ,கடந்த தொலைவுகளோ

இங்கில்லை.....