' என்னுடைய தனித்தன்மை என்பது எல்லாவற்றுக்காகவும் திறந்த மனநிலையுடன்இருப்பது. ஒரு கவிஞனுக்கு இது முக்கியம். இது ஒரு மனநிலையல்ல. இயல்பு. (not a mood an attidue). ’
கையில் அள்ளிய நீர்
அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய
நீர் நதிக்கு அன்னியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கைநீரக் கவிழ்த்தேன் போகும்
நதியில் எது என் நீர்?
*************************************************
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டுநீர் ஒசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு......
***************************************************
காற்று ஏற்றிய துகளில்
கண் கரைந்து நீராச்சு பின்
எதிரில் வந்தவர்க்கு தலைக்குப்
பதிலாய் பச்சைச் சூரியன்
**************************************
கண்ணை ஆரோக்கியமாக வத்துக்கொள்
கண்ணே சகல நோய்க்கும் காரணம்
***************************************************
ஒரு நல்ல படைப்பை போல் அறிமுகமும்,அடயாளமும் வேறெதுவுமில்லை ஒரு படைப்பாளிக்கு.
ஆம்! கவிதையைப் பற்றி பேசும்போதிலெல்லாம் திரு.ஜெயமோகன் அவர்கள் தவறாமல் எடுத்தாளும் கவிதையே மேற்ச்சொன்ன கையில் அள்ளிய நீர் கவிதை.கவிதைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும், இலக்கியத்திற்கும் கூட இந்த கவிதை மிகச்சரியாகவே பொருந்தும்.
கவிதையின் பூடக்ததன்மை மற்றும் புரியாத்தன்மை ஆகியவை இவருடைய கவிதையில் இல்லை.அவர் கூறியது போலவே திறந்த மனநிலையுடன் அணுகும் எந்த வாசகருக்கும் கவிதையனுபவம் நிச்சயம்.
ஆனால் அவர் கூறும் திறந்த மனநிலை வேறு.நான் கூற விரும்பும் திறந்த மனநிலை வேறு. நான் கூற விரும்பும் திறந்த மனநிலையென்பது உங்கள் மனம் ஒரு நல்ல வாசிப்பின் மூலம் திறந்ததாய் இருக்கவேண்டும்.
வாசிப்பும், வாழ்க்கையனுபவம் மட்டுமே எந்த படைப்பையும் புரிந்துகொள்வதற்கு முக்கியமான அடிப்படை.
மேற்ச்சொன்னதைத் தவிர, ஒரு படைப்பை புரிந்துகொள்வதற்கென்று குறுக்குவழியெதுவுமில்லை...
படைப்பாளிகளை நேரடியாக அனுகினால் என்ன? என்று உங்களுக்குத்தோன்றினால்,ஒரு நல்ல படைப்பானது படைப்பாளியை தாண்டி பயணிக்க கூடியது.சில சமயங்களில் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்கையனுபவத்தின்படி சென்றடைந்த இடத்தை அந்த படைப்பாளியால் உத்தேசித்திருக்ககூட இயலாமல் போகலாம். ஒரு படைப்பை புரிந்து கொள்ள சில சமயங்களில் நமக்கும் அந்த படைப்பிற்கும் குறைந்தளவில் ஒரு இடைவெளிகூட தேவைப்படலாம்.இதைப் பற்றி திரு.சுரா.அவர்கள் ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நூலின் ஒரிடத்தில் சம்பத் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிக அருமையாக விளக்கியிருப்பார்.
எனவே மேற்சொன்ன கவிதைகள் திரு.சுகுமாரன் என்பவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டவையாகும்.
சுகுமாரனைப் பற்றி அவ்வப்போது திரு.சுரா.,நாஞ்சில்,ஜெ.மோ அ உயிர்மை,காலச்சுவடு,உயிரெழுத்து போன்ற இதழ்களில் படித்ததோடு சரி.
பெரிய அளவில் அவரோடோ (அ) அவருடைய படைப்போடோ நேரடித் தொடர்பு என்று எதுவுமில்லை.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு புத்தக கண்காட்சியில் இவருடைய மொத்தக்கவிதைகளின் தொகுதியாக வெளிவந்த “ பூமியை வாசிக்கும் சிறுமி” தான் நான் படித்த இவருடைய முதல் புத்தகம்.
பொதுவாக எந்த ஒரு எழுத்தாளரின் மொத்த தொகுதியை வாங்குவது அவ்வளவு உகந்ததல்ல, ஒரு அயர்ச்சையையும்,சோர்வையுமே தருமென்பது திரு.ஜெ.மோ. அவர்களின் கூற்று. ஆனாலும் அதிலும் விதி விலக்குகள் உண்டு.அதற்கு உதாரணம் இந்தத்தொகுதியே.
இந்த தொகுதியில் மொத்தம் 109கவிதைகள் உள்ளது.என்னைப் பொறுத்தவரையில் இதிலுள்ள எல்லா கவிதைகளுமே எனக்கு முக்கிய-மாகப்படுகிறது. ஒரு உச்சகட்ட கவிதையனுபவத்தைத் தரும் பல நல்ல கவிதைகள் இந்தத்தொகுதியில் உள்ளது.
இந்த கவிதைத்தொகுதியைத்தொடர்ந்து நான் வாங்கிய புத்தகங்கள் 1. தனிமையின் வழி 2. இழந்த பின்னும் இருக்கும் உலகம். இரண்டுமே பத்தியெழுத்துக்கள் மற்றும் கட்டுரைகளை கொண்ட தொகுதியாகும்.
என்வாசிப்பு மற்றும் வாழ்க்கையனுபவம் சார்ந்து எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
ஒரு நல்ல இலக்கிய வாசகன் அவசியம் படிக்கப் பட வேண்டிய எழுத்தாளர்களில் இவர் முக்கியானவர். நவீன கவிதையில் இவருடைய இடம் மிக வலுவானதும் அசைக்கமுடியாதும் ஆகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
தனக்குப்பிடித்தமான ஒரு மராட்டிய கவிஞரின் ஒரு கவிதையை அவர் நினவுகூறும் விதம் அவருடைய வார்த்தைகளிலேயே பின்வருமாறு...
’நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை நேரம் . திருவனந்தபுரத்தில் நான் அப்போது வசித்து வந்த வீடு பத்மநாப சுவாமி ஆலயத்துக்கருகில் இருந்தது. கோவிலின் பின் வாசலையொட்டிய வழியில்தான் பெருமபாலும் என் பயணம். சமயங்களில் ஆல்யத்துக்கு முன்னாலிருக்கும் பத்மதீர்த்தக் குளத்தையொட்டிய வழியில் போக நேரும். அப்போதெல்லாம் ஒரு மூதாட்டி வழியை மறிப்பார். ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதாக மற்ற சுற்றுலாப் பயணிகளிடம் இறைஞ்சுவதுபோலவே என்னிடமும் கெஞ்சுவார். மறுத்து நடக்கும் போதெல்லாம் கையைப் பற்றிக் கொள்வார். இப்படி ஓரிரு முறைகள் நடந்திருக்கின்றன. அந்த மூதாட்டி கையை பற்றும்போதெல்லாம் அந்தத் தொடுகை பழக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதற்கு முன்னரும் இதே போல ஆலய முற்றத்தில் யாரோ பற்றியிழுத்ததுபோல உணர்ந்திருக்- கிறேன்.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு காலை நேரத்தில் அந்த வழியாகக் கடந்து சென்றபோது குளக்கரை வேலிக்கருகில் ஒரு மூட்டை கிடந்தது. நடையை மட்டுப்படுத்திப் பார்த்தேன். மூட்டையல்ல. சடலம். 'ரெண்டு ச்க்கரம் கொடு' என்று இறைஞ்சி அலைந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியின் சடலம். அந்த நொடியில் யாரோ என் கையைப் பிடித்திழுப்பதுபோல உணர்ந்தேன். கூடவே அந்த மூதாட்டி தொட்டபோதெல்லாம் யாரோ தொட்டதாகத் தோன்றியதன் காரணமும் விளங்கியது. அது ஜெஜூரியில் வாசித்த கிழவியின் தொடுகை. கொலாட்கர் பார்த்த கிழவியை நான் பார்த்த்தில்லை. நான் பார்த்த கிழவியை அவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.இருந்தும் கவிதையின் கை எல்லாரையும் தொடக்கூடியதுதானோ?’
இவருடைய வலைத்தளம் : http://vaalnilam.blogspot.com/
2 கருத்துகள்:
அருமையா எழுதறீங்க :)
உங்களையெல்லாம் விடவா..இருந்தாலும் இந்த பின்னூட்டத்திற்காகவாவது கூடிய விரைவில் ஏதாவது நன்றாக எழுத முயற்சிக்கிறேன்...
கருத்துரையிடுக