”மதியெனும் மனிதனின் மரணம் குறித்து” - ஆசிரியர் இரா.நடராசன்(பெயரில் சிறிது ஐயமுண்டு).
சிறுகதை தொகுப்பு.
சில படங்களும்,புத்தகங்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளென்பது ஆறிய காயங்களின் தழும்பை போன்றது. என்ன செய்தாலும் சில தழும்புகள் மறையவே மறையாது.
அந்த தழும்புகளை பார்க்கும் பொழுதும்,தடவும் பொழுதும் மனசில் மெல்ல காயம்,வலி என நினைவுகள் பூக்கத்தொடங்கும்.அது ஒரு சுகம்.
(வலி என்றவுடன் எனக்கு திரு.ஜெயமோகனும், சாருவும் நினைவுக்கு வருகிறார்கள்.2008 அக்டோபர் மாதம். நீண்ட காலத்திற்கு பிறகு குற்றாலம் பதிவுகள் சந்திப்பிற்க்கான அழைப்பிதல் உயிர்மையில் வந்திருந்தது.
முக்கிய எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பில் திரு.ஜெயமோகன் அவர்களைக் கருத்தில் கொண்டு நானும் அச்சந்திப்பிற்கு சென்றேன்.இரண்டு நாட்கள் நடக்கும் சந்திப்பில் முதல் நாள் உணவு இடைவேளையின் போது திரு.ஜெ.மோ. விடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டு, அப்போதைய அளவில் நான் படித்திருந்த கன்னியாகுமரி( நாவல்) ,ஆயிரம்கால் மண்டபம்( சிறுகதைத்தொகுதி) பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது சாருவிடமிருந்து,ஜெ.மோ.க்கு ஒரு குறுஞ்செய்தி.
தனக்கு ”பைபாஸ் சர்ஜரி” முடிந்து மருத்துவமனையில் இருப்பதால் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும், வலி அதிகமாக இருக்கிறதெனவும்.
பதிலுக்கு ஜெ.மோ. வலியைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அது கூட ஆண்மீகம் தான்.
இதைப் பற்றி சாரு பிறகொரு பதிவில் எழுதினார். ஜெ.மோக்கு வலி கூட ஆண்மீகம். எனக்கு ஆண்மீகமே வலி என்று.)
படித்து பல ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தொகுதியில் உள்ள சில சிறுகதைகள் இன்றளவிலும் என்னை மனதளவில் இம்சித்து வருகிறது.அதைப் பற்றிய பகிர்வே இது.
முதல் கதையின் பெயரே இந்த புத்தகத்தின் தலைப்பாகும்.
1.மதியெனும் மனிதனின் மரணம் குறித்து :
இது திருநங்கையாக வாழ்ந்த மனிதன் எதிர்கொண்ட பிரச்சனைகள் எப்படி அவரை மரணத்தை நோக்கி நகர்த்துகிறது என்பது பற்றிய கதையாகும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் பாணியில் எழுதப்பட்டிருக்கும் உத்திதான் இந்த கதையின் பெரிய பலம். ஒரு சாதாரண விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்வது போன்றளவில் தொடங்கும் கதையை படித்த முடித்தவுடன் ,குற்றணர்விற்கு ஆட்படாமல் இருந்தால் கண்டிப்பாக நம்முடைய இதயப் பகுதியை ஸ்கேனிங் செய்துகொள்வது உத்தமம்.
சக மனிதனை அவனுடைய அனைத்துப் பலவீனங்களையும் தாண்டி நேசித்தலே உண்மையான மனிதமும்,ஆண்மீகமும் ஆகும். இந்தக் கதையின் சாரம் இதுவென்றே நினைக்கிறேன்.
2. இரத்தத்தின் வண்ணத்தில் :
சூழ்நிலைக்காரணிகளால் விலைமாதாக வாழ நேர்ந்த பெண்,தன் தாய்க்கு எழுதும் கடிதமே இந்தக் கதை.
இதில் உண்மைச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பேர் என்று கூறி, ஒரு கல்லூரி விடுதிக்கு வரவழைக்-கப்பட்ட விலைமாதுவை சுமார் 30பேர் சேர்ந்து கொடுமைப்படுத்திய நிகழ்வொன்று மிகுந்த அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடியவர் இந்த ஆசிரியர். அந்த பெண்ணின் வலியை ஒரு ஆண் கூட உணரக்கூடிய அளவில் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார்.
கல்கி படத்தில் ஒரு பாடல் வரும் “ எழுதுகிறேன் ஒரு கடிதம்” என்று.அந்த பாட்டை கேக்கும்போதிலெல்லாம் எனக்கு இந்த கதையே உடனடியாக ஞாபகத்திற்கு வரும்.
3. ஆயிஷா
இந்த தொகுப்பில் வரும் மற்றுமொரு முக்கியமான கதை. இந்தக் கதை குறும்படமாக எடுக்கப்பட்டு,பல பள்ளிகளில் ஒலிபரப்பப்பட்டு பரவலாக எல்லோருடைய கவனத்தையும் ,பாராட்டையும் பெற்றப்படம்.
நான் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்களிடம் இந்த வழக்கமிருக்கிறது. வகுப்பில் நன்றாக படிக்கும் பிள்ளையிடத்தே மட்டும் அதிக கவனம் காட்டுவது, அவர்களுக்கென்று குறிப்பிட்ட சில சலுகைகளை அளிப்பது,அவர்களை அவர்களறியாமலே மற்ற படிக்காத பிள்ளைகளிடமிருந்து அப்புறப்படுத்துவது என்று. அதே மாதிரி சில குழந்தைகளிடத்தில் இயல்பாய் மிளிரும் புத்திச்சாலித்தனங்களை அலட்சியப்படுத்துவது,அது பற்றி கேலி செய்வதென..
அப்படி புறகணிப்புக்குள்ளாகும் ஒரு புத்திசாலிப்பிள்ளையின் பரிதாப சாவைப் பற்றியது இந்தக் கதை.
4. விளையாட்டின் அகதிகள் :
அம்மை,காலரா போன்ற வியாதிகளை விட அதிகமாக தமிழ் நாட்டின் குக்கிராமங்களில் கூட பரவியிருக்கும் கிரிக்கெட்டினால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் கதை. ஒரு உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு கிடைக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவில் விளையாடும் மற்றத்துறையைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை.அந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒரு மாறுபட்ட அனுகுமுறையில் சொல்லியிருக்கும் கதை.
5. தலைப்பு ஞாபகத்தில் இல்லை:
ஒரு நரிக்குறவனும்,அவன் சமூகமும் சந்திக்கும் வாழ்க்கை பிரச்சனைகள் பற்றி அந்த நரிக்குறவனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் போல எழுதப்பட்டிருக்கும்.
இவர்கள் மேல் எனக்கும் எப்போதும் ஒரு வியப்பு உண்டு.
1. நாடோடி வாழ்க்கை முறை.
2.இன்னும் நவீன யுகத்திற்கு அவ்வளவாக தங்களை ஒப்புக்கொடுக்காதது.
3.வியாதியென்று மருத்துவமனை வாசல்களில் இவர்கள் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை
4.மரணத்தை இவர்கள் எதிர்கொள்ளும் விதம். இவர்களின் சமூகத்தில் நேர்ந்த ஒரு இறப்பைக்கூட இதுவரை நான் கண்டதில்லை.
5. அவர்களுடைய குழந்தை வளர்ப்புமுறை.
6. குழந்தைகள் தூங்கும் போது ஏதாவது இரும்போ (அ) துடைப்பக்குச்சியையோ தொட்டிலின் அடியில் போட்டுவைப்பது நம்முடைய வழக்கம்.குழந்தைகளை காத்து,கருப்பு எதுவும் அண்டக்கூடாது என்பதற்காக.ஆனால் இவர்களின் குழந்தைகள் புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டுவதற்கு கூட ஆளின்றி காற்றிலும்,புழுதியிலும் தனியாக கிடக்கும்.
இந்தத் தொகுப்பில் இந்தக் கதை மட்டுமே ஒரு நகைச்சுவை யோட்டத்திலிருக்கும்.
மேற்கூறிய தொகுப்பில், என் ஞாபக வெளியில் உலவிக்கொண்டிருக்கும் கதைகளைப் பற்றியே பேசியுள்ளேன். மேலும் சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.அவை மறதியெனும் பாசியில் வழுக்கி விழுந்து விட்டது.
நூலகப்புத்தகம்,படித்தும் பல ஆண்டுகளாகிவிட்டது. மேலும் புத்தகத்தை வாசிக்கையில் இது போல பதிவெழுதுவேன் என்று நான் கருதியிருக்கவில்லை. எனவே புத்தகத்தைப் பற்றி மேலதிகத் தகவல்கள் தர இயலவில்லை. இருப்பினும் சற்று முயற்ச்சித்தால் கோவை விஜயா பதிப்பகத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------
திரு.சேஷய்யா ரவி இவரைப் பற்றி எவ்வளவு பேருக்கும் தெரியும் என்று தெரியவில்லை. இவர் சன் தொலைக்காட்சியில் சன் செய்திக்களுக்காக --------லிருந்து சேஷய்யா ரவி என்று எதாவது ஒரு ஊரின் பெயரையோ,இடத்தின் பெயரையோ கோடிட்ட இடத்தில் நிரப்பி சொல்லுவார். இப்போதும் அதில்தான் பணிபுரிகிறாரா என்று தெரியவில்லை.
விசயம் இதுதான்.இவர் எழுதிய ஒரு சிறு கதை தொகுதியையும், கவிதைத் தொகுதியையும் வாசித்திருக்கிறேன். தலைப்பு ஞாபகத்தில் இல்லை.
கவிதைகள் அவ்வளவாக என்னை கவரவில்லை.ஆனால் சிறுகதைகள் நன்றாகவேயிருந்தது. அதிலும் குறிப்பாக சுபாவம் என்றொரு சிறுகதை.
மழை நாட்களில் வாய்க்கால் உடைப்பு ஏற்ப்பட்டு ஊருக்குள் புகுந்துகொள்ளும் தண்ணீரோடு சில மீன்களும் வரும். அதை பிடிக்க சிறு வயது பையன்கள் முதல் பெரியவர்கள் வரையென்று, அந்த ஊரில் போட்டி நிலவும். ஒரு பெரிய மீனை பிடிக்க கதையில் வரும் சிறுவன் முயல அது அவன் பிடிக்குள் சிக்காமல் தப்பி, அவன் நினைவுகளில் நீந்திவந்து பயமுறுத்தும். தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போகும் நிலையிலிருக்கும்போது, எப்படியோ அந்த மீன் இவன் கையில் கிடைக்கும்.அதை தரையில் அடித்துக்கொல்வான் சிறுவன். அவனுடைய மனம் சார்ந்து விரியும் இந்தக் கதையை அழகான,கச்சிதமான நடையில் எழுதியிருப்பார்.
அதே போல இவருடைய குடி பற்றிய வர்ணனை இந்தக் கதைகளில் நிறைய இடத்தில் இடம்பெறும். மதுவின் ஒரு மிடறு உள்ளிரங்கும்போது ஒரு சிறிய எரிமலை உருண்டை தொண்டையிலிருந்து வயிற்றுக்குச் செல்வதை விவரிக்கும் பகுதி சிறப்பாக இருக்கும். இவருடைய புத்தகத்தைப் படித்த பிறகு,இவரைப் பார்க்க நினைத்தேன்.ஆனால் இவர் பற்றிய ஒரு தகவலுமே கிடைக்கவில்லை இன்றுவரையிலும் கூட...
9 கருத்துகள்:
and remove word verification. it will be easy for commenting.... :-)
Dear siva,
One request for you, Please add your blog in tamlish, tamilmanam. nalla vishayam naalu perukku (?) mmmm:-)) poy seravendum.
Please do it for me.
Thanks in advance
:-)
DEAR MURLI,
//remove word verification// DONE! KINDLY CHECK...THANKS.
DEAR MURLI,
//remove word verification// DONE! KINDLY CHECK...THANKS.
DEAR MURLI : OK.I COULDN'T DENY YOUR WRITTEN REQUEST.I WILL DO THE SAME & LET U KNOW THE RESULT ASAP.
மிக நல்ல பகிர்வு நண்பரே...
நன்றி கமலேஷ்.
அன்புள்ள சிவக்குமார்,
உங்கள் பதிவில் நண்பர் சேஷய்யா ரவி பற்றிய பதிவைக் கண்டேன்.
சேஷய்யா ரவி நம்பிக்கை தந்த ஆளுமைகளில் ஒருவர். விரிவான வாசிப்பும் நுட்பமான பார்வையும் கொண்டவர். இடதுசாரிக் கண்ணோட்டம் உடையவராக இருந்தவர். மனஓசை போன்ற இதழ்களில் எழுதினார்.புதுயுகம் பிறக்கிறது இதழில் அவர் எழுதிய வலைகளுக்குள் சிக்காத வாழ்க்கை என்ற மீனவர் பற்றிய கட்டுரை செறிவான உரைநடைக்கு உதாரணம் என்று இப்போதும் கருதுகிறேன். அறிவின் கரை மீறி என்ற கவிதைத் தொகுதியும் இன்னும் மனிதர்கள் என்ற
சிறுகதைத் தொகுதியும் ரவியுடையது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என்
நண்பர். சன் டிவியில் சக ஊழியர்.இப்போது ஜூனியர் விகடனின் பொறுப்பாசிரியர்.
இலக்கிய உலகில் உச்சங்களை எட்டுவார்கள் என்று நான் பொறாமையுடன் நம்பிய நண்பர்கள் மூவர்: பாதசாரி, விமலாதித்த மாமல்லன், சேஷய்யா ரவி.அவர்கள் தொடர்ந்து இயங்காமற் போனதில் எனக்குள் விழுந்த ஏமாற்றப்பள்ளம் அப்படியே இருக்கிறது.
ஊக்கத்தொகையுடன்
சேர்த்து கிடைக்கும நிலுவைத் தொகையென..
முறைப் பெண்ணுடன் வரும் பண்டிகையென.
தேநீரோடு கூடிய மழையென...
பதிவிற்கு வந்ததோடு, ஒரு அரிய மனிதரைப் பற்றிய என்னுடைய நெடுநாள் தேடலுக்கு, சில தகவல்களோடு அவருக்கும் உங்களுக்குமான உறவு,அவரைப் பற்றி
உங்களுடைய கருத்து என-சிறப்பு விருந்தில் அடுத்தடுத்து வரும் பலகாரம் போல... என் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வார்த்தைகளில்லை..
இன்னும் மனிதர்கள் என்ற தொகுதியில் வரும் சுபாவம் என்ற கதையைப் பற்றித்தான் நான் கூறியிருந்தேன்.
ஒரு சிறந்த ஆளுமையாக வந்திருக்கவேண்டியவரைப் பற்றித்தான் நான் பதிவுசெய்திருக்கிறேன் என்ற என்னுடைய கூற்று,உங்களிம் மூலம் உறுதிபட்டதாகவே நினைக்கிறேன்.
உங்களுடைய கட்டுரைத்தொகுதிகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கிறது. ஒரு பதிவாகவே எழுதிவிட எண்ணம்.
உங்களை திருவனந்தபுரத்தில் சந்திக்கவேண்டுமென்பது என்னுடைய நெடு நாள் அவா.சென்றமுறை வாய்க்கவில்லை.இன்னும் ஒரிரு மாதங்களில் நிச்சயம் உங்களைச் சந்திக்கிறேன்.
தங்களின் வருகைக்கும்,தந்த தகவல்களுக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக