வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தேசாந்திரியுடன் ஒரு மாலை



வாசிப்பின் கைப்பிடித்து நடந்ததில் கற்றுக்கொண்டது, கொண்டிருப்பது நிறைய ஆயினும் வாசிக்க இன்னும் இருக்கிறது என்ற எண்ணமே சமயங்களில் உற்சாகமாகவும், பதட்டமாகவுமிருக்கிறது. பாலியங்களில் பற்றி எரிந்து மத்திமம் துவங்குவதற்கு முன்பே அணைந்த நெஞ்சின் கங்குகளில், இன்னும் அணையாமல் காட்டுத் தீ போல அவ்வப்போது பற்றிக்கொள்வது வாசிப்பும் அதனொட்டி வரும் தேடலும்தான்.வாசிப்பில் திறக்கும் தருணங்களைப் போல அலாதியானது வேறெதுவுமில்லை. இது மட்டுமே என்னை காதல் முதலான விசமங்கள் தீண்டாமல் பள்ளி காலம் தொட்டு இன்று வரையிலும் கவசமாயிருந்து காத்துக்கொண்டிருக்கிறது.

வாசிப்பின் படிப்படியான கட்டங்களிலும் அதன் வளர்ச்சியிலும் எனை ஆகர்ஸித்தவர்கள் நிறைய..அவர்களில் ஒருவரும் முக்கியாமானவரும் எஸ்.ரா. இவர் எனக்கு விகடன் தேசாந்திரி தொடர்கள் மூலமாகத்தான் அறிமுகம். ஆனால் படித்த சில நாட்களிலேயே நினைவில் நன்றாக பதிந்துவிட்டார். அந்த கால கட்டங்களிலிருந்து சமீபம் வரையில் அதிகமும், மகிழ்வுமாக படித்தது அவருடைய கட்டுரைகளும், சிறுகதைகளுமே.

நியூட்டன் முன்னால் விழுந்த ஆப்பிள் போல, சில நண்பர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. தங்களிடமிருக்கும் படித்த புத்தகங்களை ஒரிடத்தில் பகிர்ந்து முறைப்படுத்தினால் ஒரு நல்ல நூலகம் கிட்டுவதுடன், எப்போதும் ஒரு புத்தகம் என்பதற்கு வாய்ப்பும், வசதியும் எளிதாகுமென்றார்கள். வழக்கம் போலவே முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒசி என்றால் எனக்கு ஒன்னு..எங்க அண்ணனுக்கு ஒன்று என்று வங்கிக்காசளார் கை புழங்கும் பணம் போல, நூலகத்தை கைப்பற்றிக் கொண்டேன். வாய்ப்பு நேரும் போது வாசிக்க வேண்டிய புத்தங்கள் என்று என்னிடம் எப்போதும் இருக்கும் பட்டியலில் இருந்த பெரும்பாலான புத்தங்கங்ள் இங்கிருந்தே எனக்கு கிடைத்துவருகிறது. (இது பற்றி நல்லொரு அறிமுகம் இங்கே

முதலிரண்டுப் புத்தகளுக்குப் பிறகு ஆரம்பித்தது எஸ்.ராவின் நாவல் வரிசை. நெடுங்குருதி, உப பாண்டவம், துயில் மற்றும் யாமம் என என்னை முழுமையாக உள்வாங்கிக்கொண்டது எஸ்.ராவின் நாவல் ஆளுமையே. வாசித்த இந்த நான்கு நாவலும் அதனதன் சாரத்தில் நிச்சயம் தீவிர வாசிப்பார்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியவை. கட்டுரைகளிளோ..சிறுகதைகளிளோ காணப்படும் எஸ்.ரா அல்ல நாவலில். அவர் எழுத்தில் தவறாமல் தொடர்ந்து வரும் காந்தலைப்போல அவரும் நம்முடனே வந்து கொண்டிருப்பார்.

உப பாண்டவம்: என்னை மிக அதிகம் கவர்ந்த நாவல் உப பாண்டவமே. மகாபாரதம் என்ற ஒரு இலக்கியம் போதும். சமுத்திரம் பார்ப்புதும் பாரதம் படிப்பதும் நிச்சயம் வேறுவேறு அனுபமல்ல. உப பாண்டவம் ஒரு ஒடம். அது மகாபாரத்தின் சில முக்கியத் தீவுகளை எளிதான வார்த்தைகளில் ஆழ்ந்த புரிதலில் நமக்கு அறிமுகப்படுத்தும். பாரதத்தை இலக்கியம் சார்ந்து அணுக உப பாண்டவம் நுழைவாயில். எனக்குத்தெரிந்து துரியோதனின் சகோதரர்கள் நூறு பேர்களின் பெயர்களையும் இதில்தான் நான் பார்த்தேன். ஆழ்ந்த புரிதலும், வாசிப்புமட்டுமல்ல,இரண்டும் இயைந்த மனவிரிவும், கடும் உழைப்புமிருந்தால் மட்டுமே உபபாண்டவம் மாதிரியான ஒரு இலக்கியம் சாத்தியப்படும். ஏனெனில் எண்ணிக்கையற்று பல தலைமுறைகளில் பிறவித்தொடர்பு போல வாய்வழியாக செவிவழியாக தொடர்ந்து வரும் பாரதத்தில் முற்றிலும் புதிய இடங்களை தொட்டுணரச்செய்வது அத்தனைக்கத்தனை எளிய காரியமல்ல.

நெடுங்குருதி- விளையாட்டுப் பருவத்தில் நாம் ஆசையாக அள்ளித்தின்ற மண்ணை, தலைமுடியிழுத்து முரட்டுத்தனமாக அழுத்திப்பிடித்து இந்த வயதில் திணிப்பதுபோல மூச்சு முட்டுகிறது அவர் மொழி விரியும் இந்நாவலின் காட்சிகளில். மூர்ககம்,பிடிவாதம் மட்டுமே ஒரு வாழ்க்கையாக விரிந்து கிடக்கிறது இந்நாவல். புதைகுழி போல மனிதர்களை உள்ளிழுத்து அதன் சுவடே தெரியாமல் விரிந்து கிடக்கும் வீதியும், அதனூடே நுழையும் அனல்காற்றின் மூச்சும் நம்மை திணறடிக்காமல் இருந்தால் நிச்சயம் நம் அனுபவ சேகாரத்தில் விட்டுப்போன ஒரு பகுதியிருக்கிறது

துயில்- நோய்மை,குணம் என விரியும் நாவல் பேசுவது உடல் நோய்மை அதன் குணம் பற்றிமட்டுமல்ல. நோய்மையென்றே அறியப்படாத ஏராள விசயங்களும் அதன் விளைவுகளின் உக்கிரங்களும். இரண்டு புள்ளிகள் மீது லாவகமாக மொழியிழுத்துவரும் அனுபவங்களின் உக்கிரங்களை எந்த விருப்பு, வெறுப்புமின்றி சன்னல் வழி காட்சியாய் விரித்துகொண்டே போகும். நம்மால் எளிதாக கடந்து வர முடியாத விசயங்களில் சிக்க வைத்துவிட்டு தள்ளி நின்று கொள்ளும் மொழி இவருடையது.

யாமம்- வாசனைத்திரவியத்தின் பெயர்.எல்லோர் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் வியாப்பித்திருக்கும் ஒரு வெற்றிடம் போன்றது இந்த யாமம். இந்நாவலை படிக்கையில் இருள் ஒரு துளியாய் ஆகும் ஒரு காட்சி ஒயாமல் மனதில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இப்போதும் கூட யாமம் என்ற நாவல் என்னளவில் ஒரு துளி இருளின் படிமாகவே என்னுள் தங்கியிருக்கிறது. இதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.இதில் யாமம் ஒரு ஊடு பா..மொழி நெய்ததை புரிந்துகொள்ள முடியாமல அலைமோதிக் கொண்டிருக்கிறேன். ஜெ.மோ மீபொருண்மை என்று இந்நாவல் பற்றி ஒரு பெரிய கட்டுரையை எழுதுகிறார். அனேக விசயங்களில் விமலாதித்த மாமல்லனிடமிருந்து நான் மாறுபட்டாலும் அவர் சொன்னதுபோல ஜெ.மோ கட்டுரையை வாசிப்பதைக் காட்டிலும் யாமம் நாவல் வாசித்தது எளிதாகவேயிருந்தது.

தீவிர எழுத்தாளர்கள் ஒரு காலத்தில் உக்கிரமாக தொடங்கி அதே உக்கிரத்தோடே கைவிடப்படும் சிறு பத்திரிக்கை பற்றி எஸ்.ரா '' சிறு பத்திரிக்கை நடத்தாவன் முழுமையான எழுத்தாளராக முடியாது என்று ஒரு தொல்நம்பிக்கை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் உண்டு'' இதன் படி தன் முன்னோடிகள் வழி எஸ்.ரா அட்சரம் என்ற இதழை ஆரம்பித்து சுமார் 5 ஆண்டுகாலம் தமிழுக்கும், தீவிர இலக்கியத்திற்கும் தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்துள்ளார். இதற்கு முன்னரே இவர் கோணங்கியோடு சேர்ந்து ''கல்குதிரை'' என்ற என்ற இதழையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். அனேகமாக தமிழ் இலக்கிய உலகில் நானறிந்த வரையில் கோண்ங்கியோடு அதிக நெருக்கமுள்ளவர் எஸ்.ரா. என்றே அறிகிறேன். நிறைய இடங்களில் கோணங்கியோடு கழிந்த பொழுதுகளை இவர் பகிர்ந்துள்ளார்.வாழ்வின் உக்கிரத்தருணங்களில் வெடிச்சிரிப்புகள் வரவழைக்க கூடியதுமானது இருவரும் இணைந்திருந்த நாட்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தேசாந்திரி என்ற சொல் இவருக்கே நன்கு பொருந்தும்போலும். அவ்வள்வு பயணங்கள் பகிர்தல்கள். ஜெ.மோ.வின் பயணமெல்லாம் பெரும்பாலும் ஒரு தீவிர நோக்கம் கொண்டதாகவே இருக்கும். ஆனால் எஸ்.ராவுக்கோ பயணம் மட்டுமே தீவிர நோக்கமாக இருக்கும் போல.
கவிதை தவிர இலக்கியத்தின் அனைத்து பங்களிப்புகள் சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், திரைப்பட நூல், குழந்தைகள் நூல், நாடகத்தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு, தொகை நூல் என்று கால மாற்றத்திற்கேற்ப தற்போது இணையத்திலும் செயல்பட்டு மிக பரவலான கவனம் பெற்றவர். இவருடைய பரவலான பிரபலத்திற்கும், புகழுக்கும் மற்றொரு முக்கிய காரணமாக நான் அவதானிப்பது விமர்சனம் என்ற ஒரு துறையை கவனமாக யாரும் கவனிக்கா வண்ணம் இவர் தவிர்த்து வருவதும் கூட என்பது என் அவதானிப்பு

மேற்கண்ட என் சிறு குறிப்புகள் கண்ணைக் கட்டிக்கொண்டு கையால் எதையும் தொட்டுணர்வது போலவே. ஆனால் கையால் தொட்டுண்ர்வதை காதுக்கருகில் ஒருவர் நின்றுகொண்டு சொன்னால் இன்னும் எளிதாக உள்வாங்கலமல்லவா..ஆம் சேர்தளம் நண்பர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை நான் அவ்வாறே உணர்கிறேன். வாய்ப்பிருக்கும் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை இனிதாக்க வேண்டுமென சேர்தளம் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறேன்.


சனி, 11 ஜூன், 2011

நினைவுகள்



சிறகொடுக்க
வெட்டவெளியில்
அலையும் பறவைகள்

புழக்கமிழந்த

கட்டிடத்தில்
நுழைந்தவன்
முகத்தில் முட்டிமோதும்
வௌவ்வாள்கள்

கலக்கிய நீரையும்
துப்பிய எச்சிலையும்
மொய்க்கும் குளத்துமீன்கள்

காற்றின் திசைக்கு
ஒப்புக்கொடுக்கும்
மேகங்கள்

சந்தியில் கூடடையும் குரல்கள்

காற்றுலுக்கும் இலைகள்

கரையொதுங்கும் வண்டல்

காலடியில் கரையும் மணல்

போத்தல்களிலிருந்து பொங்கும் நுரை

உலரும் கரையீரம்

கல்லெறிந்த தேன்கூடு



வியாழன், 9 ஜூன், 2011

கோடிட்ட இடம்


அது அப்படித்தான் நிகழ்திருக்க வேண்டும்
நோக்கத்தினாலேயேப் பிழைத்த நோக்கமென
நிசப்தங்களே சப்தங்களாகிடும் இரவுகளென
காயம்பட்டுக்கொண்டோம்

காயப்படுத்திவிடக்கூடாதென
எல்லைகளில் நின்றுகொண்டோம்
மீறி விடக்கூடாதென
இடைவெளி நீட்டித்தோம் அழைப்புகள்
இடைஞ்சலாகிவிடக்கூடாதென
முகங்கள் மறைத்தோம் கள்ளத்தனங்கள்
கட்டவிழ்ந்துவிடக்கூடாதென
தவறுதலாகப் பிடித்திழுத்த
முனைக்கயிறுகளென

நம் உறவு
ஒரு
வாழ்த்தைக் கூட
பறிமாறிக்
கொள்ள முடியாமல்
தவறிக்கூட வந்துவிடாதா
உன் அழைப்பு
குழாயைத் திருகி
காத்திருக்கும் குழந்தையாய்..
பூர்திக்கு சொல்லொன்று எஞ்சியிருக்கும்
கவிதையாய்...

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஒரு மொக்கை....

சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு :

டேய் ஊரு வுட்டு ஊரு வந்த உனக்கே இவ்வளவு இருந்தா, இந்த ஊர்க்காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்.நீங்க வந்து அதை இதையும் பண்ணி பொன்னை ஏமாத்தி கூட்டிப்போய் கல்யாணம் பன்னீபீங்க..நாங் அப்படியே கையை ----------வச்சு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போன்னு நினைச்சிட்டியா..நீ மட்டும் ஒரு அப்பனுக்கு,அம்மாவுக்குப் பொறந்திருந்தா கூட்டிப் போடா பார்க்கலாம்..

டேய் இவ்வளவு தூரம் வந்ததுக்கப்பறம் நான் இனி விடறதா இல்லை..உன்னோடத் தங்கச்சியா நான் கட்டறண்டா உன்னால ஆனதைப் பார்த்துக்கோ....

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு :

இந்த ஊர்ல தான் அண்ணன்,தங்கச்சியா பழகனாக் கூட தப்பா நினைக்றாங்கக்கா..சரஸ்வதியக்கா அம்மாகிட்ட  பாத்திரம் கழுவிகிட்டே சொல்லிட்டிருந்தாங்க.....

சம்பவத்தன்று :

காலையில் :

ஊரே பரபரப்பா இருந்துச்சு..சுரேஷ் அண்ணன் சொன்னது மாதிரியே சரஸ்வதியக்காவை கூட்டிட்டு ஒடிப்போயிட்டராம்...அந்தக்கவோட சொந்தக் காரங்கெல்லாம் ஆளுக்கொரு பக்கம் தேடிட்டுருக்கறாங்க....

முற்பகல் :

 ஒடுனவுங்களை புடுச்சுட்டாங்களாம்..திருமூர்த்தி மலைக்குத்தான் போயிருக்கறாங்க...சரஸ்வதியக்காவோட அண்ணனுக்கும் இடம் தேரிஞ்சு போச்சு..மொத்தமா அந்தக்காவோட ஊர்காறங்க எல்லோரும் வேன் எடுத்துட்டு அங்க போயிருக்கறாங்க....

பிற்பகல் :

சுரேஸ் அண்ணன் தாலி கட்டிடாராமா.. ஆனா சரஸ்வதியக்காவோட அண்ணன் அதை அத்து வீசிட்டு எல்லோரும் சேர்ந்து சுரேஸ்-ஐ போட்டு அடி பின்னி எடுத்துட்டாங்க...போலிஸ் ஸ்டேசன்ல வேற பொன்னை சுரேஸ் அண்ணனும் அவரோட பிரண்சும் சேர்ந்துதான் தூக்கிட்டுப் போயிட்டாங்க, அப்படீன்ன்னு கம்ளெய்ன் கொடுத்திட்டாங்க...

மாலை :

ரெண்டுப்பேரையும் போலிஸ் டேசனுக்கு கூட்டிட்டுப் போய்டாங்க..சுரேஸ் அண்ணனை மட்டும் டேசன்ல வெச்சுட்டு சரஸ்வதி அக்காவை அவங்க அண்ண்னோட அனுப்பிச்சுட்டுங்களாம்...

சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து:

சுரேஷ் அண்ணன் குடியிருந்த வீட்டுமுன்னாடி வந்து நின்ன ஆட்டோவிலிருந்து அவரை இரண்டு பேரு கைத்தாங்கலா இறக்கி கூட்டிட்டிப் போனாங்க..முகம் பூராவும் அங்கங்க கருப்பு ,கருப்பா கந்திப் போய் மாம்பழத்துல வண்டு போட்ட ஒட்ட மாதிரி.

சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் இரண்டு நாள் கழித்து :

 ஆட்டோ சுரேஸ் அண்ணன் வீட்டு முன்னாடி வந்து நின்னுது.  அதிலிருந்து ஒரு ஏட்டையா எறங்கி, அண்ணனை வெளில வரச் சொன்னார். அண்ணன் வெறும் மேலோடயே வெளியே வந்தப்பதான் அவரோட உடம்புல வரி வரி சிவந்துகிடந்தது தெரிஞ்சது...

டேய்! போய் சட்டையை போட்டுட்டு வா...போலாம்..

எங்ககீங்க...

மாமியார் வீட்டுக்கு...

பொன்னையும் வரச்சொல்லுங்க...

டேய்...த்தா நான் என்னை மாமா வேலையா பார்க்கிறேன்..ஒழுங்கா டேசனுக்கு வந்து ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு வந்துரு...

ஏங்க என்னை மட்டும் கூட்டிட்டுப் போயி கையெழுத்து வாங்கிறீங்க.. பொன்னும்  ஆசைப்பட்டுதான் எங்கூட ஒடி வந்துச்சு..அதையும் வரச் சொல்லுங்க...

அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..இப்ப நீயி ஒழுக்கமா ஆட்டோல வந்து ஏற்றய்ய...இல்ல அடிச்சி இழுத்துட்டுப் போகட்டுமா...

பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் தைரியப்படுத்த அண்ணன் பேசமா போய் ஆட்டோல ஏறிட்டார்....

அதே நாளின் மாலை :

ஆட்டோல சுரேஸ் அண்ணன் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலைல அவரை ஊருக்கு அனுப்பி வச்சுட்டாங்க..பொன்னையும் அவங்க சொந்தக்காரங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க.....

அதுக்கப்பறம் ஒரு வாரம் ஊர்ல எங்கத் திரும்புனாலும்  இதைப் பத்தியே பேசிட்டிருந்தாங்க...அப்புறம் அப்டியே வேர வேர பிரச்சனை வர இதை மறந்துட்டாங்க...

கொஞ்ச நாளைக்கப்பறம் சரஸ்வதியக்காவுக்கு கல்யாணம் அப்படீன்னு கேள்விப்பட்டேன்....

 இரண்டு வருசத்துக்கப்பறம் சுரேஸ் அண்ணனுக்கு வேறொரு பொன்னைப் பார்த்துக் கட்டி வச்சுட்டாங்க...அப்படீன்னும் சொன்னாங்க....

அதுக்கப்பறம் ஒருவருசம் கழிச்சு புருசனும் பொண்டாட்டியுமா சுரேஸ் அண்ணன் எங்க ஊருக்கு மறுபடியும் வந்தார்.அந்தக்காவும் நல்லத்தான் இருந்தாங்க..இருந்தாலும் சரஸ்வதியக்கா மாதிரி இல்லை....

சுரேஷ் அண்ணனும் பழைய மாதிரி இல்லை.முதல்ல இருந்ததைவிட  ரொம்ப இளைச்சுப்போயிருந்தார்.பழைய உற்சாகம்,சுறுசுறுப்பு இல்லை.ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை.மொத்தத்தில் ஒப்புக்கு வாழ்ந்துட்டிருக்கிறது மாதிரியிருந்தார்.

சரஸ்வதியக்காவோட வாழ்க்கையும் ஒன்னும் சரியில்லைன்னு..அவங்க புருசன வுட்டுட்டு வேற யார்கூடவோ இருக்கறதாவும் கேள்விப்பட்டேன்..

இவங்களைப் பிரிச்சுவச்சவங்க அதுக்கப்பறம் இதைப் பத்தியெல்லாம் கவலப்படாம அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்கப் போயிட்டாங்க...

ஆனா இந்த பிரச்சனைக்கப்பறமும் ஒடிப் போ(ற)னவங்க எண்னிக்கையும் மட்டும் குறையவில்லை...என்ன அவங்களோட பெத்தவங்க அப்புறம் சொந்தக்காரங்க அவங்களோட அணுகுமுறை மட்டும் ரொம்ப மாறிருச்சு...

அதுக்கான காரணங்கள் பின்வருமாறு....

1.ஒடிப்போனவங்கள தேடிக்கண்டுபிடிச்சுக் கூட்டிவந்து போலிசார் மூலியுமா பிரிக்கறதுக்கு ஆகுற செலவுகள் ( சிம்பிளா ஒரு கல்யாணத்தையே நடத்திரலாம்)

2.பொன்னோட குடும்பச்சூழல்,பையோனோட கூடுதல் விசயங்கள்

3. ஏற்கனவே நடந்த மாதிரி இவங்களைப் பிரிச்சு புதுவாழ்க்கையை அமைச்சுக்கொடுத்து அது நல்ல போகும்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னொன்னு அவங்களாத் தேடிக்கிற வாழ்க்கைகிறதனாலா கணவன் மனைவிக்குள்ள இருக்கற அன்னியோன்யமும்,வாழ்ந்துகாட்டனும் அப்படீன்னு ஒரு வெறியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்குது.

4.சமயத்துல மானம் போயிடக்கூடாது அப்படீங்கறதுனால பெத்தவங்களே அரசல்,புரசலாக் கேள்விப்படற விசயத்தை வச்சு பிள்ளைகளுக்கு மொறையா கல்யாணத்தை பன்னிவச்சாறாங்க...

5.பெத்தவங்க வெறுத்துப் போயிடராங்க..அபூர்வமா சில பெத்தவங்க புரிஞ்சுக்கிறாங்க...

என்ன சொல்றது..

மகற் தந்தைக்கு ஆற்றும்நன்றி தானாகவே
 துணை தேடிக் கொளல்

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு பகல் பொழுது..

ஆகாயம்:

காகிதத் துனுக்குகளில்
சவரக்கத்தியில் வளித்த
நுரை பொதி மேகங்கள்...

ஜன்னல் வழி:

குனிந்து குனிந்து
வளர்ந்து...வளர வளர
குனியும்
 ஊசியிலை நெடுமரம்.......


அறை :

வாசனைத்திரவியமாய்
வியாபித்திருக்கும் வெளிச்சம்


அறைக்கு பின்புறம்:

ஞாபக வெளியைத் துலாவும்
பறவையின் குரல்


தெரு:

விமோச்சனமில்லாத சாபம்
தந்தவன் நினைவில் படும்பொழுதெல்லாம்
குரைக்கும் நாய்....


மனம்:

எதாவது ஒன்றைத் தொட்டு 
அறுந்தும், தொட்டுத் தொடர்ந்தும்
இருக்கும்  யோசனைகள்

வியாழன், 11 நவம்பர், 2010

ஒரு சிறு குறிப்பு....

வழக்கமான உற்சாகங்கள் ஏதுமின்றி ஒரு விடுமுறை தினமாக மட்டுமே கழிந்தது  தீபாவளி. பண்டிகைகள்,பிறந்த நாள்கள் மற்றும் ஏதாவது முக்கிய நிகழ்வுகள், நன்றாக சாலையில் ஒடிக்கொண்டிருக்கும் வாகனம் திடீரென்று நம் கட்டுப்பாட்டை மீறித் இடவலமாக திமிறும்,  நிறுத்தி பின் சக்கரத்தை உற்று நோக்கும் செயலைப் போல் வாழ்கையின் கடந்த நாள்களை நிதானித்து நோக்குவதற்கு வாய்பளிக்கிறது....

இந்த வருடப் பண்டிகை போனவருட பண்டிகையையோ அல்லது அதற்கு முந்திய எதாவது ஒரு பண்டிகையையோ நினைவுபடுத்துகிறது.

அதிலும்  தீபாவளிப் பண்டிகைகள் மிக விசேசமானைவையாகும்.. .புத்தாடை,பலகாரங்கள்  இரண்டுமோ (அ) எதாவது ஒன்றோ என ஏனைய பண்டிகைகளிலிருந்து விடுபட்டு தனித்து நிற்கும் தீபாவளியின் சிறப்பு பட்டாசுகளினால்.....

கையில் பத்துவிரல்களிருப்பதே ஆரம்பள்ளிகளின் கணக்குகள் தாண்டி பண்டிகைத் தேதியை வாரங்களாக,நாட்களாக எண்ணி மகிழத்தான்....

மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிடும் பால்ய கால தீபாவளி...ஒருமாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது விடலைத் தீபாவளி..வரப்போகும் மனைவியைப்போலவோ,வந்து நிற்கும் காதலியைப் போலவோ,அழைப்பிதழ் தந்து செல்லும் தோழியைப்போலவோ இருக்கிறது விடலை பதுங்கி, முதிர்வின் நிழல் தெரிபடத் துவங்கும் இந்த வயதுகளின் தீபாவளி...

வாழ்க்கையின்,பண்டிகைகளின் சலிப்புகள் பற்றி படராதவர்கள் பாக்கியாவான்கள்...ஆனால் எனக்கோ புத்தகம் தொடங்கி,படம்,இசையென பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது சலிப்புகளின் மேலேறி வர..

எதிலும் பங்கேற்காமல் ஒரு வேடிக்கையாளானாய் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்து தாண்டிப் போக பழகிக்கொண்டிருக்கிறேன்.. எதிலும் பட்டுக்கொள்ளாமலும், பங்கேற்காமலும் இருப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவில்லை...

ஒரு புள்ளியைச் சுற்றியுள்ள சாத்தியப்பாடுகள் அதிக ஆர்வத்தையும் தரும் அதற்கீடான சலிப்பையும் தரும்..அவரவர் மனோநிலையை பொறுத்தது இது.

 அணிந்திருக்கும் கண்ணாடிகளுக்கேற்ப மாற்றங்கள் பெறும் பிம்பங்கள் மட்டுமே எல்லா நாட்களும்...

வெள்ளி, 1 அக்டோபர், 2010

வரிக்கு வரி
அழுத்தம் திருத்தமாக
இரண்டு முறைகள்
சப்தமாக தன் கவிதையை வாசிப்பது
அவர் வழக்கம்..

நாட்களின் நகர்வில்
அவருடைய சப்தங்களே  

கவிதைகளாயின...
                ****
விசேச தினங்கள்

1)
தர நினைத்து
தரத் தயங்கி
தரயேலாமல்
நினைவாய் வைத்துக்கொள்ளும்
வாழ்த்து அட்டைகள்
வாங்குவதற்கு...

2)
வாழ்த்துக்கள் நுரைத்துப்
பொங்கும் விசேச தினங்களில்
என் விசேங்கள் நுரைப்பதோ
உன் வாழ்த்துகளில்