சனி, 7 ஆகஸ்ட், 2010

முடமான நம்பிக்கை!!!

அது நிச்சயம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் விடுப்புத்தினமான ஒரு  சனிக்கிழமையாகத்தானிருக்க வேண்டும்.

நான் நூலகத்திற்கு வந்திருந்தேன். ”இளைய பாரதம்” என்ற பெயரில் நாங்கள் புதிதாகத் தொடங்கியிருந்த கையெழுத்துப்பிரதியின் அன்றைய மாதத்தின் பிரதியை நூலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்லாதோர்களின் பார்வைக்கு வைந்திருந்தேன். இந்தப் பிரதியில் புதிதாக வாசிப்பவர்களின் கருத்துக்களை அறிவதற்காக  சில வெற்றுப்பக்கங்களை இதழின் பின்புறத்தில் இணைத்திருந்தோம்.

நூலகம் திறந்த (9.30) ஒரு மணி நேரம் கழிந்து (10.30) வந்த ஒருவர், எல்லாப் பத்திரிக்கைகளையும் புரட்டியபோது “இளைய பாரதம்” அவரின் பார்வையை இடறியிருக்கவேண்டும். எடுத்து சிரத்தையுடன் (இந்த வார்த்தையை நானே சேர்த்துக்கொண்டேன்) வாசிக்கத்தொடங்கினார்.வாசித்து  முடித்ததும்   வெற்றுப் பக்கத்தை உபயோகமுள்ளதாக்கினார். 

அவர் சென்று சிறிது நேரம் கழிந்தபின் என்ன எழுதியிருக்கிறார் என்ற ஆவல் மேலெழ படித்துப் பார்த்தோம்.ஆம்! அவர் வாசித்துக்கொண்டிருக்கையில் கையெழுத்துப்பிரதியின் முழுமுதல் உரிமையாளர் என்னுடன் இணைந்து கொண்டார். உங்களின் கவனம் முழுவதும் வாசிப்பவரின் மேலேயேயிருந் -ததால் நான் இதை அப்போது உங்களுக்குச் சொல்லவில்லை.

சரி விசயத்திற்கு வருவோம். அவர் அந்த கையெழுத்துப்பிரதியில் இருந்த மூட நம்பிக்கை கட்டுரையைப் பற்றித்தான் கருத்துச் சொல்லியிருந்தார். நிற்க! இந்த இடத்தில் மூடநம்பிக்கை என்று நான் எதைச் சொல்லுகிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக உங்கள் ஆவல் அதிகரிப்பது இயல்புதான். ஒரு விசயத்தை நேரிடியாக சொல்வதைக் காட்டிலும் ஒரு குட்டிக்கதை மூலமாகவோ (அ) சம்பவம் மூலமாகவோ சொல்வதுதான் சிறந்த உத்தி என்று அன்றைய பிரபல இதழ்களின் வாயிலாகவும், சில படங்கள், செய்திகள், நண்பர்கள் ,ஆசிரியர்கள் இத்தனைக்கும் மேலாக என் சுய அனுபவத்தின் வாயிலாகவும் நான் அறிந்திருந்தேன். இத்தனை இத்யாதிகளின் மூலமாக அறிந்த ஒரு விசயம் நிச்சயம் உண்மையாக இருக்கவேண்டும் அவ்வாறு இல்லையெனில் உண்மையை ஒத்திருக்க வேண்டும் தானே. சரி! விடுங்கள்! நாம் மறுபடியும் விசயத்திற்கு வருவோம்.

அந்த மூட நம்பிக்கை பற்றிய கதையைச் சொல்வதற்கு என்னை நீங்கள் அனுமதித்தால்தான்,வெற்றுத்தாளை நிரப்பிய அந்த பரிச்சையமில்லாத  நபரின் கருத்தை நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.உங்கள் அமைதியையே, ஆமோதிப்பாக கொண்டு கதையைத் துவக்குகிறேன்.

அதற்குமுன் நீங்கள் இரண்டு விசயங்களை உணரவேண்டும்.1) யாரும் வேண்டுமென்றே கதை சொல்வதில்லை,வேண்டும்போது சொல்கிறார்கள்.2) இடைச்செருகல் இல்லாமல் வாழ்க்கையுமாகாது, இலக்கியமுமாகாது . எனவே என் இடைச்செருகலை நீங்கள் பொறுத்துதான் ஆகவேண்டும்.

 அயர்ச்சியின் அறிகுறிகள் வெளிப்படையாகவே உங்கள்முகத்தில் தென்படுவதால் நான் கதைக்கு வருகிறேன்.

கதை இப்படி ஆரம்பிக்கும் : அந்த வீட்டில் ஒரு பிராமண தம்பதிகள் வசித்து வருகின்றனர். பிரமாணம் என்ற பதம் உங்களுக்கு நெருடலாக இருந்தால் தம்பதியர் என்று வைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறீர்கள்.அந்த  தம்பதியரில் கணவனுக்கு மட்டும் மூச்சு சம்பந்தமான ஒரு ரகசியப் பயிற்சித்  தெரியும்.

அதாவது நம் மூக்கில் இரண்டு நாசிகள் இருந்தாலும் ஒரு சமயத்தில் இடது நாசியிலோ (அ) வலது நாசியிலோ தான் காற்று வெளிச்செல்லும்.நீங்கள் உடனே மூக்கில் விரல் வைத்துப் பார்ப்பது தெரிகிறது(இதற்கு நீங்கள் உங்கள் ஆட்காடி விரலைப் பயன்படுத்தவேண்டும்). இதைப் பற்றி இன்னும் நிறைய விளக்கம் வேண்டுமானால் ஏதாவது யோகசானம் பற்றிய புத்தகத்தில் துலாவினார்களானால் கிடைக்கும். நேரத்தைக் கணக்கில் கொண்டு இப்போது நாம் கதைக்கு வருவோம்.

பொதுவாக ஒரு காரியமாக வெளியே செல்லுகையில் காற்று வலது நாசியில் வெளிவந்தால் காரியம் சித்தியாகும். அந்த பிராமணர் தேவையானபோது காற்றை வலது நாசியில்  வெளியேற்றும் பயிற்சியைக் கற்றிருந்தார்.

 மிக சிரமப்பட்டு, வேறுயாருக்கும் தான் கற்றுத் தருவதில்லை என்ற நிபந்தனையுடன் தான், தன் குருவிடமிருந்து அவர் அப்பயிற்சியைக் கற்றுக்கொண்டார். எப்படியோ இதனை மற்ற யாருக்கும் தெரியாமல் இவ்வளவு காலம் பயன்படுத்தி வந்தார்.பலன் பெற்று வந்தாரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை.

வழக்கத்தின் படி ஒரு நாள் வெளியே செல்ல வாசல் வருகையில் அவருடன் அவர் மனைவியும் வந்துவிட்டார். இவர் செல்வது  முக்கியமான காரியமாக இருந்திருக்கும் போலும். இப்போது அவர் நாடியில் கைவைத்துப் பார்க்கிறார்,காற்று இடது நாசியில் வருகிறது. எங்கே நீங்கள் சொல்லுங்கள் ஏற்கனவே நான் முன்பே கூறியது படி காரிய சித்திக்கு எந்த நாசியில் காற்று வரவேண்டும்?

ஆஹா..அப்படித்தான்.சரியாகச்சொன்னீர்கள்! வலது நாசியில்தான்!நீங்கள் கவனமுடன் படித்து வருகீறீர்கள் என்று நினைக்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் பத்து பைசா பெறாத இந்த விசயத்தை இப்படி வளைத்து வளைத்து எழுதிக்கொண்டு வருகிறேன்.
 பத்து பைசா என்றா சொன்னேன்.மன்னிக்கவும்! உடனே திருத்திக்கொள்ளு -ங்கள்   பத்து பின்னூட்டம் (அ) பத்து ஓட்டுகள் கூட பெறாத விசயம் என்று.சரி! நான் உங்களை மேலும் சோர்வுக்குள்ளாக்க விரும்பவில்லை,கதைக்குத் திரும்புகிறேன்.


எங்கே விட்டேன்.ஆங்..வலது நாசியில் காற்று வந்தால்தான் காரியம் நடக்கும். ஆனால் பிரமாணருக்கோ இடது நாசியில் காற்று வருகிறது. அவருக்குத்தான் மூச்சுப் பயிற்சித் தெரியுமே,காற்றை வலது நாசிக்கு மாற்றிக்கொண்டால் போச்சு.பிரச்சனை அதுவல்ல மனைவி பக்கத்தில் இருப்பது தான்.பயிற்சியின் போது பார்த்துவிட்டால்.சும்மாவே நோண்டி^2 க் கேட்பவள் இதையும் நோண்டி^2க் கடைசியில் நம் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்-துவிட்டால்.. அய்யோ! அப்புறம் அந்த பயிற்சிக்குண்டான பலனிருக்காது...சரி இவளை எப்படி உள்ளே அனுப்புவது..

தாகமாகயிருக்கிறது என்று தண்ணீர் கேட்டால் நிச்சயம் உள்ளே சென்றுதான் ஆகவேண்டும் (அவருக்கேன் இந்த யோசனையை வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!!..ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு யோசனை என்று ஒரு உல்டாதான் நேக்குத் தோன்றது) , அதற்குள் பயிற்சியை முடித்து விடலாம்..சரியென்று தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டார். மனைவிக்கு குழப்பம்.உள்ளேயிருந்து தானே வருகிறார் வரும்போதே தண்ணீர் அருந்தி விட்டுத்தான் வந்தார்!!..பிறகேன் மறுபடியும் தண்ணீர் கேட்கிறார்..திடீரென்று அவளுக்கொரு யோசனை தோன்றி வாசலில் எட்டிப் பார்த்தாள்..அப்போது அவ்வழியே ஒரு கைம்பெண் வந்துகொண்டிருந்தார். கணவன் மேல் அவளுக்கு சந்தேகம் வந்ததா.. இல்லையா.. என்று தெரியவில்லை.அவளும் உள்ளே சென்று ஒரு தம்ளரில் நீர் கொண்டு வந்தாள்.சீக்கிரமாக வந்துவிட்டதால் கணவனால் பயிற்சியை முடிக்க முடியவில்லை.அதனால் ஒரு குவளை நிரம்ப (சொம்பு என்ற வார்த்தையை விவேக் முதல் பதிவர்கள் வரை குறியீடாக மாற்றிவிட்டதால் குவளை என்ற சொல் சொம்பின் பதிலி ) தண்ணீர் கொண்டு வருமாறு பணிக்கிறார்.

மனைவியின் அந்நேரத்து முகக்கோணலையும், முறைப்பையும், முனக லையும்  சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என் முகவரியைத் தேட ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதால் நான் கதையையே தொடர்கிறேன்.

உள்ளே செனற மனைவி  குவளை நிரம்ப நீர் கொண்டு வரவும் அவர் சுவாசத்தை வலது நாசிக்கு மாற்றும் பயிற்சி முடியவும் நேரம் சரியாகயிருந்தது. வந்த தண்ணீரை வேண்டாம் என்று சொன்னால் நடக்கப் போகும் விபரீதங்களைக் கற்பனை செய்து பார்த்தவர் நீரை வாங்கி ஒரு மிடறு.


இது போலவே மனைவி வாசல் வரும்போதெல்லாம் நீர் கேட்டே (ஏற்கனவே வெற்றி பெற்ற யுக்தி) சமாளித்திருக்கிறார்.ஆனால் இவர் நீர் கேட்கும்போதெல்லாம் வாசலை எட்டிப் பார்த்த மனைவிக்கு வேறு^2 விசயங்கள் கண்ணில் தென்பட்டிருக்கிறது.


 வழக்கத்தின் தொடர்ச்சியில் ஒரு முறை பிராமணர் வெளியில் செல்லும் போது மனைவியும் வாசல் வந்திருக்கிறார். இந்த தடவை பிராமணர் சற்று முன்னதாகவே மூச்சைப் பரிசோதித்துவிட்டார். வலது நாசியில்தான் வெளி யேறிக்கொண்டிருந்தது. எனவே மனைவிடயிடம் விடைப் பெற்றுக் கொண்டு வாசல் இறங்க, அதற்குள் மனைவியிடமிருந்து ஒரு அபாயக்குரல் அவரை நிற்கச்சொல்லி. கணவர் நின்று,திகைக்க, விடு^2 வென்று உள்ளே சென்று திரும்பிய மனைவியின் கையில் குவளை தழும்ப நீர்.ஆச்சரியத்துடன் இந்த முறை கணவர் வாசலைப் பார்க்கையில் தலையில் விறகுடன் ஒரு மூதாட்டி அவரை கடந்து சென்றிருக்கிறார்.”சரிதான்” மனதிற்குள் சொல்லி,வாயில் ஒரு நமுட்டுச் சிரிப்பை வைத்து வந்த தண்ணீரை வாங்கி ஒரு மிடறு..

ஆக வெளியில் செல்ல வாசல் இறங்குகையில் எதிரில் கைம்பெண், தலை விறகுச்சுமை, பூனை, எருமை போன்ற இத்யாதிகள் வரும்போது நீர் வாங்கி அருந்திச் செல்லும் வழக்கம் இவ்வாறுதான் நிலைபெற்றது. எனவே அது வெறும் மூட நம்பிக்கையே! அதை விட்டொழிப்போம் அறிவியல் தளத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோம்! செயலாற்றுவோம்!! என்று அந்தக் கட்டுரை முடிந்திருந்தது..

உங்களைப் போலவே, படித்தவுடன் ம்ஹிம்..இதுக்குத்தான் இந்த அலட்டலா..அட அப்படியா...உஸ் அப்பா...அட ராமா..இது நாலுவரில சொல்லியிருக்கப்படாதோ...கொய்யால இவ்வளவு நேரம் கவனமாப் படிச்சிட்டு வந்த எங்களை கேனயனாக்கிட்ட பாத்தியா- அப்படீன்னு மேலே நூலகத்தில் இந்தக் கட்டுரையைப் படிச்சவரும் பேசாம புலம்பிட்டு போயிருந்தார்னா இந்த பதிவுக்கான அவசியமோ , அதையும் நீங்க கொட்ட படிக்க வேண்டிய அவசியமோ நேர்ந்திருக்காது....

ஆனால் அவர் அன்று எழுதிவைத்துவிட்டுப்போன அந்த கருத்து ( பதிவுப் பாஷையில் பின்னூட்டம் ) பெவிக்கால் போன்று மனசில் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவர் பதிந்திருந்தது இதுதான் :

”அந்த பிராமணர் மேற்க்கொண்ட அந்த சுவாசப் பயிற்சியை எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கிச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்”- சோ & சோ ..அப்ப அனானிமஸ் அவ்வளவு புழக்கத்தில் இல்லை போலும்.உங்களைப் போலத்தான் நானும்,இளைய பாரதத்தின் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் சின்னதாய்  ஒரு சிரிப்பை மட்டும் பறிமாறிக்கொண்டோம். ஒன்று மட்டும் உறுதிசெய்துகொண்டேன். அந்த மாதிரியான கட்டுரைகளை எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும் கருத்துச் சொல்லும் பக்கத்தைச் சேர்ப்பதில்லை.....நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்???..

4 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

வணக்கம் தலைவரே... தங்களை நேற்று கண்டதில் மகிழ்ச்சி...

க.பாலாசி (ஈரோடு)

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.கா.பாலாசி : நன்றி & மற்றும் மிக்க மகிழ்ச்சி.உங்கள் உபசரிப்பிற்கும்,இந்த வருகைக்கும்.

பாற்கடல் சக்தி சொன்னது…

இதுக்கு இவ்ளோ பெரிய கதை வேணுமாக்கும். ஆமா, இத்யாதி எல்லாம் எப்டி மூட நம்பிக்கையோ, அதே மாதிரி தான் மூச்சு பயிற்சியும்.
அப்புறம், அந்தம்மா கற்பிதம் பண்ணிகிட்டது மத்தவங்களுக்கு எப்டி பரவும்?

-- ஹி ஹி எல்லாம், ஒரு கேள்விக்காக தான் .

சு.சிவக்குமார். சொன்னது…

இன்னா சக்தி மெயின் மேட்டரை வுட்டுடீங்களே...எவ்ளோ கஷ்டப்பட்டு மூட நம்பிக்கை எப்படி வந்ததுனு மேட்டரைத் தேத்தி ஒரு கட்டுரையைப் போட்ட படிச்ச அந்த மனுசன் கட்டுரை இன்னா சொல்லுதுனுவுட்டுட்டு மூச்சுப் பயிற்சி எப்படி செய்யற்துன்னு கேட்டா இன்னா சொல்றது..அதுக்கொசரம் தான் இவ்வளவு பெரிய்ய....

ஆனா மூச்சுப் பயிற்சின்றுது மூட நம்பிக்கையான்னா ஹி...ஹி...நேக்குத்தெரிந்து அதுல கொஞ்சம் குழப்பம் இருக்குது...