வெள்ளி, 30 ஜூலை, 2010

கொஞ்சம் பெரிய ஒண்ணு

ஈரானுக்கு மஜீத் மஜ்டி- ன்னா இந்தியாவிற்கு பஷீர். இரண்டுபேருடைய கால கட்டங்கள் , வயது, கலாச்சாரம், வெளிப்பாட்டின் ஊடகம் இவைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இரண்டுபேரும் இந்த உலகத்தை, வாழ்க்- கையை - அதன் வியப்பை, ஏமாற்றத்தை, பரிசை, திருப்பத்தை, கற்றுத்தரும் பாடத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை, தன்னுடைய சுழலை என எல்லா- வற்றையும் பார்ப்பது குழந்தைகளின் வழியாகத்தான். குழந்தைகளின் வழி அவர்கள் சித்தரித்துக் காட்டும் உலகிற்கு ஈடு இணை ஏதுமில்லை.


எதனால் என்று தெரியவில்லை.நிகழ்காலம் என்னதான் இன்பமாக இருந்தாலும், கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிடினும் மனமென்னவோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாய்ந்துகொள்வது அந்த நினைவுகளில்தான்.

பஷீரின் ”பால்யகால சகியை”ப் படிக்கையில் ஒரு டைம் மெஷினில் ( Time machine ) ஏறி என்னுடைய பால்யத்தை மறுபடியும் ஒருமுறை சென்று பார்த்து -விட்டு வந்தது போல் இருக்கிறது. இத்தனைக்கும் பாலியம் தொடர்பான பகுதிகள் இரண்டு மூன்று தான் இருக்கும்.இருப்பினும் அந்த நடையின் தொனி தொடும் தூரம் அத்தகையது. மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் ஒரு சிறு துளையி -டுவதைப் போன்றது அவருடைய நடை.போகிற போக்கில் மாட்டின் மூக்கில் மூக்குப் பொடியை தூவி விட்டுச்செல்லும் சிறுவனின் குறும்பைப் போன்ற நடை பஷீருடையது.


சுகறா,மஜீத்..பால்யகாலம் தொட்டே மிக அனுக்கமான நண்பர்கள். ஆனால் இதில் ஆர்ச்சயம் என்னவென்றால் அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த வைரீகளாக இருந்தார்களென்பதுதான்.

குழந்தைகளின் மனவோட்டத்தை, குறும்புத்தனங்களை,உடல்மொழியை மற்றும் முக்கியமாக அவர்களுடைய பரிபாஷையை அழகாகத் தந்தவர்களில் என்னளவில் என்னால் சுட்ட இயலுவது இருவரைத்தான்.ஒருவர் பஷீர், இன்னொருவர் சுரா.

பொதுவாக பாலியங்களில் நாம் பயன்படுத்தும் சில சொல்லாடல்களையும் அது சுட்டும் பொருள்களையும் நினைத்துப் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். சில சமயம் நம்முடைய அந்த பாலியச் சொற்களுக்கு அர்த்தமே இருக்காது.

// மஜீது வெற்றிக்களிப்புடன் அர்த்தமில்லாத ஒரு சத்தம் கொடுத்தான்,ஜீக் ஜிகு! ஜீக் ஜிகு! // பஷீரின் பெரும்பாலான கதைகளில் இந்த மாதிரி குழந்தைகளின் வெற்றிக்களிப்பு சில அர்த்தமில்லாத சொற்களைத் தான் கொண்டிருக்கும்.

// ஆகாயமும் பூமியும் அறியும்படியாக அவன் கம்பீரமாக அறிவித்தான் “எனக்கு மரம் ஏறத்தெரியுமே’’//

இந்த வரிகளுக்கு முன் இருவருக்குமிடையே ஒரு சிறு போட்டி வரும். சுகறாவை ஏதாவது ஒருவகையில் கூசிச் சிறுக்க வைக்க வேண்டும் என மஜிது, தன் வீட்டைப் பற்றி சொல்லுகிறான்,தன் தந்தையின் பணியைப் பற்றி சொல்லுகிறான்.ஆனால் சுகறாவோ எல்லாவற்றுக்கும் பளிப்பு காட்டி விடுகிறாள். இந்த இடம் கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையை நினைவுபடுத்தியது.

பள்ளியில் ஒரு முறை மஜீதுக்கு ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.1+1=?. மிகச்சிரமப்பட்டு ஒரு விடையை யோசிக்கிறான், கொஞ்சம் பெரிய ஒண்ணு.

இரண்டு நதிகள் ஒன்றாகச் சேர்ந்து, பெரிய நதியாக சேரும்போது இரண்டு தனித் தனி ஒன்றுகள் சேர்ந்து பெரிய ஒன்றாகத் தான் வரவேண்டுமல்லவா...


ஆனால் பஷீரின் ஆசிரியர் என்ன அத்தனை சொற்பமானவரா..மஜீதுக்கு நாலைந்து அடிகள் கொடுத்து எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பெரிய அடியாக நினைத்துக்கொள்ளச் சொல்லிவிடுகிறார். வாழ்க்கையும் இப்படித்தானே!! ஒரு பெரிய கோட்டை பக்கத்தில் வரைந்து ஏற்கனவேயிருக்கும் கோட்டைச் சிரிதாக செய்வது போல் , ஏதாவது ஒரு பெரிய சோகத்தை கொண்டுதானே இன்னொரு சோகத்தை சிறிதாக்கிக் கொள்ளமுடிகிறது.

பொதுவாக கலைஞர்கள் மஜிதாகயிருக்கும்போது..யதார்த்த வாழ்க்கை அவனுடைய ஆசிரியரைப் போல இருக்கிறது...

சுகறாவைக் கரைக்க மஜீது சொல்லும் அந்த வாக்கியம் எவ்வளவு அழகாக எந்த பண்டிதத்தனமும்,மேதாவித்தனமும் இல்லாமல் வெறும் குழந்தையின் குரலாகவே ஒலிக்கிறது.

//நான் ஒண்ணுமே செய்யாம இருந்தாலும்,வாப்பாவும்-உம்மாவும் சும்மா என்னை பறண்டவும்,நுள்ளவும் செய்தாங்க!சும்மா அவுகளுக்கு இது ஒரு சுகம்.இனி நான் மரிச்சுப் போனா அவுங்கா சொல்லுவாங்களா இருக்கும்.அந்த பாவப்பட்ட மஜீது இருந்தான்னா ஒரு நுள்ளாவது குடுக்கலாமென்று//

பாட்டி வீட்டுக்கென நான் கேரளம் பயனிக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டருகே ஒரு ஆறு ஒடும். , சிறு ஒடைப் போலத் தொடங்கி, சற்று பெரிதாகி,மறுபடியும் சிறிதாகி,மறுபடியும் பெரிதாகி கொஞ்ச தூரத்தில் ஒடையாகி..ஒரிடத்தில் தேங்கி பெரிய ஆறாக மாற்றம் பெற்று..சிற்ச் சில இடங்களில் பரந்த மணலில் நுண்ணமான ஒரு வெள்ளிக்கம்பியெனவோ, வைரக்கம்பியெனவோ மாறி இறுதியில் ஏதாவது ஒரிடத்தில் ஒரு பெரிய நீர்பெருக்குடன் கலக்கும்.

வாழ்க்கையும் , பால்ய கால சகியும் இப்படியே.

விக்ரமாதித்யன் கவிதையொன்று வரும்....

பெண்கள் என் பிரதான பலிபீடம்
நான் ஆடாய் அரிவாளாய்

பலிபீடமாய் மாறி மாறி
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

மஜீதும் கிட்டத்தட்ட அவ்வாறே..கைகூடாவிட்டாலும் கைவிட முடியாத நிலையில் பால்யால காதலின்,ப்ரியத்தின் செறிவு கொஞ்சமும் குறையாத சுகறா..அவ்வளவு வறுமையிலும் தன் மகனின் செழிப்பிற்கு வாடும், கிடைப்- பதில் முக்கால் வாசியை மகனுக்கென பங்கு வைக்கும் ,வறுமையைக் காட்டிலும் மகனின் முக வாட்டத்திற்கு வருந்தும் தாய், அண்ணனை எவ்வகை யிலாவது மகிழ்ச்சிப்படுத்த அவன் அமைக்கும் தோட்டத்திற்கு தன் கவலைகள், ஏக்கங்களை மறைத்து நீருற்றும் சகோதரிகள் என...அவனும் மாறி,மாறி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

ஆனால் பஷீருடைய இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கும்.எந்த அதி உன்னதங்களும் பஷீருடைய மாந்தர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கைப் போக்கு விதி வழியாகத்தான்.அதனால் அவருடைய கதையில் சுபங்களையெல்லாம் எதிர் பார்க்க இயலாது. எனவே வெளிநாடும் செல்லும் ஒரு அனுக்கமான நண்பனின் பிரிவு, திடீரென்று வரும் நண்பனின் மரணம் குறித்த தகவல், காதலித்தவள் வேறொருவனை கரம் பிடிக்கும்,பிடித்த நிகழ்வு , நள்ளிரவு மழைச் சப்தம்-காலையில் அதன் தடயம் என இவற்றில் ஏதாவதொரு உணர்வைத்தான் பஷீரின் கதைகளின் முடிவில் என்னால் உணர முடிகிறது.

சுகறாவுக்குப் பிறகும் தாய் மற்றும் சகோதரிக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சற்றே பின்னகர்ந்து மஜீது மட்டும் தன்னுடைய தந்தையை சற்று அனுசரித்து இருந்தானெனில்......


காதல் மோதலில்தான் ஆரம்பிக்கும் என்று எந்த முட்டாள் சொன்னானோ எனக்கு தெரிந்த பெரும்பாலான நல்ல நட்புகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி நட்புகள் எல்லாம் மோதலில்தான் ஆரம்பித்தது. அதில் பெண் தோழிகளும் அடக்கம். யாரை நான் கல்லூரிப் பிரச்சனையின் போது முதலில் அடித்தேனோ அவனும் நானும் தான் கட்டிபிடித்து அழுதோம் கல்லூரி இறுதி வருடத்தின் கடைசி தினத்தில்...

எந்த பெண்ணை நான் காயப்படுத்தினேனோ அவளிடமிருந்துதான் முதல் ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம் என் கைக்கு வந்தது.

மன்னிக்கவும்...

தற்போது என்னிடம் கவிதை

எதுவும் இருப்பில் இல்லாததால்

நீங்களாகவே ஒன்றை கிறுக்கிகொள்ளவும் என் சார்பாக...

என்று எழுதியதைப் படித்துச் சிரித்த அந்த பரிச்சையமில்லாத தோழி இப்போது எங்கே இருக்கிறாளோ..

Be a tower,stand for ever என்று எழுதித் தந்தவள் என்ன செய்துகொண்டிருக்- கிறாளோ..

”இரு இரு உன்னை டீச்சர்கிட்ட சொல்லி என்ன செய்யறேன்னு பாரு” என்று உடைந்த வளையல்களோடு சென்றவள் புகார் செய்ததாக ஒரு முறைகூட அந்த டீச்சர் என்னை அழைத்ததேயில்லை...


வைக்கம் முகம்மது பஷீர் :

நான் இவரைப் பற்றி படித்தது மற்றும் கேள்விப்பட்டது வரையில் இவரை சில வரிகளில் சித்திரமாக்கிவிடலாம்.

தாழ்வரம் சற்றே சரிந்த வீடு..
முற்றத்தில் மங்குஷ்தான் மரம்.
அதன் நிழலில் ஒரு சாய்வு நாற்காலி..
நாற்காலியில் சாய்ந்த ஒர் உருவம்தான் பஷீர்...

ஒரு மழை நாள் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வீட்டின்பின்புறம் சென்றிருக்கிறார் பஷீர்..அப்போது வானில் மின்னல் வெட்டியதில் யாரோ தன்னை படம் பிடிக்கிறார்கள் என்று போஸ் கொடுத்தார் என்று இவரைப் பற்றி ஒரு பகடி மதராசப் பட்டினம் படம் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தது.இது உண்மையா (அ) இட்டுக்கட்டப்பட்ட பகடியா என்று தெரியவில்லை.


1908 ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி தலையோலப் பரம்பில் பிறந்தார். 10 ம் வகுப்பு ப்டிக்கும்போது வீட்டை விட்டு ஓடியவர்.இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப்போராட்டத்தின் ஒரு பகுதியான உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். சுதந்திரப்போராட்ட வீரர் எனும் நிலையில் மதராஸ்,கோழிக்கோடு கோட்டயம், கொல்லம் மற்றும் திருவனந்தபுர சிறைகளில் தண்டனைகளை அனுபவித்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச்செயல்பட்டார்.அமைப்பின் கொள்கை இதழாக உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கையும் துவங்கினார்.

பத்தாண்டு காலம் பாரதமெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்கா,அரேபியா போன்ற நாடுகளிலும் சுற்றித்திரிந்தார். இக்காலகட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று கூறலாம்.இந்த காலகட்டத்தில் சில ஆண்டுகள் இமயமலைச் சரிவுகளிலும்,கங்கை நதிக்கரையிலும் இந்துத்துறவியாகவும், இஸ்லாமிய சூபியாகவும் வாழ்ந்தார்.

மனைவி : பாபி பஷீர். மக்கள் : ஷாஹீனா, அனீஸ் பஷீர்.
1994 ஜீலை 5ம் தேதி காலமானார்.

”அம்மே உம்ம காந்தியை ஞான் தொட்டு ” என்று ஒடி வந்த பஷீரை “நான் பஷீரைத் தொட்டேன் தெரியுமா” என்று சுராவிடம் பகிர்ந்ததாக ஜெயமோகன் ஒரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை மிக கவர்ந்த எழுத்தாளர்களிர் பஷீர் மிகமுக்கியமானவர் என்று இவரைப் பற்றி ”புன்னகைகளின் பெருவெளி” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சீரிய வாசிப்பு பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டிய எழுத்தாளர் பஷீர். இவருடைய மதிலுகள் என்ற நாவல் மம்முட்டி நடித்து திரைப்படமாகவும் வந்துள்ளது.


மேலே உள்ள அவரின் வாழ்க்கை குறிப்பை கண்ணுறும்போதுதான் தெரிகிறது..
அவரும் புரட்சியாளாராக, எவற்றிலும் நிறைவுகொள்ளாதவராக எவ்வளவு தீவிரமாக திரிந்தாரோ அதை விட தீவிரமாக அமைதியாக அமர்ந்து மிகப் பெரும் படைப்புகளைத் தந்துள்ளார். அன்பில் நிறைந்தார் அதுவே பின் படைப்பாகியது.அதுவே அவரை இவ்வளவு காலம் கழிந்த பின்னும் நம்மைத் தொடுகிறது.

குளச்சல் மு. யூசுப்

இந்தக் கதையை மேற்கூறிய படி நான் உள்வாங்குவதற்கு முக்கிய காரணம் இவர்தான்,இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர். பொதுவாக மற்ற துறை -களின் மொழிபெயர்ப்பிற்கும்,இலக்கிய மொழிபெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. பின்னது சற்று சிரமமானது.சில சமயங்களில் அபாய -கரமானதும் கூட...பஷீரைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் புதிதாக வாசிக்கும் வாசகர்கள் பஷீரை- பஷீராகவே சென்றடைய வேண்டும்.இந்தக் கதையின் எந்த ஒரிடத்திலும் நான் பஷீரை தொலைக்கவேயில்லை. எனவே -தான் நான் இந்தக் கதையில் மீறப்பட்டிருக்கும் சமூகத்தின் நியதியையோ (அ) ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகளையோ பற்றி பேசவில்லை.

காரணம் மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் ஆறு அதன் கரையை அதுவாகவே விரிவுபடுத்திக்கொள்கிறது. மனிதனின் முயற்சிகளனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு அதனிடம் சரணடைவதாகவே உள்ளது. வாழ்க்கை, சமூகம் அதைத்தொடர்ந்து வரும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.இதை பஷீர் அறியாதவரா என்ன?...


மு. யூசுப் - மொழிபெயர்ப்பு என்ற அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மேல் அனாசயமாக நடந்து கடந்திருக்கிறார்.

இதே புத்தகத்தைப் பற்றி அருமை நண்பர் திரு.முரளியின் பகிர்வு இங்கே..பால்யகால சகி

6 கருத்துகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

சிவா நல்ல நடை...தொடரவும்.

வேண்டுகோள் -( ஒரு புளியமரத்தின் கதை' யைப்பற்றி விரிவாக எழுதவும்)

சு.சிவக்குமார். சொன்னது…

திரு. திருவிற்கு நன்றி. முயற்ச்சிக்கிறேன்.

santhanakrishnan சொன்னது…

மிகவும் அற்புதமான பதிவு.
மலையாள எழுத்துலக ராட்சஷர்
பஷீர்.

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி திரு.சந்தானகிருஷ்ணன்.

Nathanjagk சொன்னது…

விரிவான விளக்கம். ஆனால், குழப்பமான நடையில் உள்ளது. முதலில் பஷீரை அறிமுகப்படுத்திவிட்டு பின் அவரது படைப்பு ஒன்றை விரிவாக அலசியிருக்கலாம்.

சு.சிவக்குமார். சொன்னது…

திரு.”காலடி” ஜெகநாதன் அவர்களுக்கு நன்றி.என்னுடைய தளத்திற்கு வந்ததற்கும் வாசித்ததற்கும். உங்களுடைய விமர்ச்சனம் நிச்சயம் கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.

ஆனால் ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு அறிமுகம் அவனுடைய படைப்பேயன்றி வேறு எதுவுமில்லை. எனவேதான் ஒரு நல்ல படைப்போடு படைப்பாளியை நினைவூட்ட நினைத்தேன். ஏனெனில் பஷீரை நான் அறிமுகப் படுத்தவேண்டிய ஆளுமையாக நினைக்கவில்லை.நாம் ஏதாவது ஒருவகையில் எங்காவது ஒரிடத்தில் அவரை கவனியாமல் வந்திருப்போம்.எனவே ஒரு சின்ன ஒரு மின்னலின் மூலம் அவரை மீண்டும் எல்லோருக்கும் நினைவூட்டவிரும்பினேன். அவ்வளவே..

எனினும் தங்களுடைய சிரத்தையான பின்னூட்டத்திற்கு மெத்த மகிழ்ச்சி.